பக்கம் எண் :

122தொல்காப்பியம்-உரைவளம்

உவமத்தொகை யென்றார். 1அதனானே யன்றே ‘உவம இயல் புடையன உவமத்தொகை’ என ஓதுவாராயினர்.

இன்னும் ‘உவமவியல வுமத்தொகை’ யென்றதனான் உவமையும் உவமிக்கப்படும் பொருளும் மாறி நிற்றலும் கொள்க. முகத்தாமரை, கைம்மாரி எனவரும். இவை உருவகம் அன்றோ எனின் உருவகத்தொகை என்று ஓதாமையானும், 2பண்புத்தொகையுள் அடங்காமையானும் உவமையுள் அடங்கும். இத்தொகையை வேற்றுமைத் தொகையோடு 3சேர ஓதியவதனான் அதனோ டிதற்கு ஒற்றுமையுண்டென்று கொள்க.

நச்

இஃது உவமத் தொகை கூறுகின்றது.

இ-ள் : உவமத் தொகையே - உவம உருபுகள் தொக்க தொகைச் சொற்கள், உவம இயல-அவ்வுவமையுருபுகள் தொக்கனவேனும் தொகாது நின்றாற் போலப் பொருள் உணர்த்தும் இயல்பின, எ-று.

மேல் உவம இயலுள் ‘வினைபயன் மெய்யுரு’ (உவம. 1) என்னுஞ் சூத்திரத்தான் ‘உவமை நால் வகைய’ என்றும், ‘அவைதாம், அன்ன ஏய்ப்ப’ (உவம. 11) என்னுஞ் சூத்திரத்தான், அவற்றின் உருபு முப்பத்தாறு என்றும் கூறுகின்ற ஆசிரியர், ஈண்டு அவ்வுருபுகள் தொக்கு நிற்குமாறு கூறுகின்றார்.


1. உவமத் தொகையில் வேற்றுமைத் தொகைத்தன்மையிருப்பினும் உவமத்தொகை என்றே கூறப்படும் என்பதற்கு ஆசிரியர் ‘வேற்றுமை உவம இயல்புடையன உவமத் தொகை’ என்னாமல் ‘உவம இயல்புடையன உவமத்தொகை’ என்றார்.

2. முகமாகிய தாமரை என விரிதலின் பண்புத் தொகை எனல் கூடாது. ஏன் எனின் பண்பும் பண்பியும் அல்ல அவை. அதனால் பண்புத் தொகையுள் அது அடங்காது.

3. சேர ஓதியது 16-ஆம் சூத்திரத்தில், ஒற்றுமையாவது வேற்றுமைத் தொகையாகவும் விரிக்கப்படுதல்.