1‘தீயின் அன்ன ஒண்செங் காந்தள்’ (மலைபடு - 145)) எனவும், 2‘கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்’ (குறுந் - 9) ) எனவும், 3‘மானோக்கு நோக்கு மடநடை யாயத்தார் (‘உவம. 12) ) எனவும் உரை-மேற். 4‘எழிலி வானம் எள்ளினன் தரூஉம் கவிகை வண்கைக் கடுமான் தோன்றல் (உவம 14. உரை-மேற்.) எனவும், 5‘வீங்கு சுரை நல்லான் வென்ற ஈகை’ (உவம. 14 உறைமேற்) எனவும் வருவனவற்றின்கண் அன்ன, மானும், நோக்கு, எள்ளி, வென்ற என்னும் உவம உருபுகளை இரண்டாவது கொண்டு முடிந்தவாறு காண்க. இவற்றுள் ‘எள்ளி’ என்பது செய்து என் எச்சமாகிய உவம உருபு. இங்ஙனம் உவம உருபு விரிந்துழி நின்று உவமப் பொருள் தருகின்ற இரண்டாவது தொக்குழியும் அவ்வுவமப் பொருள் தந்தே நிற்கும் என்றுணர்க. ‘என்போல் பெருவிதுப் புறுக’ (புறம். 88) என்புழிப் ‘போல்’ என்பது ‘போல’ என்னும் செயவென் எச்சக் குறிப்பாகிய உவம வுருபு.
பொருள் : 1. தீயினை ஒத்த அழகிய செங்காந்தள் 2. குளத்தில் மூழ்கும் மகளிர் கண்ணை ஒக்கும். 3. மானைப் போலும் பார்வையுடைய மடப்பத்தோடு கூடிய நடையுடைய தோழியர். 4. எழுச்சியுடைய மேகத்தை இகழ்ந்து தரும் கவிந்த கையையுடைய வேகக் குதிரையுடைய தோன்றல். 5. பருத்த பால் மடிச்சுரையுடைய நல்ல பசுவைப் போலும் ஈகை. |