பக்கம் எண் :

126தொல்காப்பியம்-உரைவளம்

‘நும்ம னோருமற் றினைய ராயின்’ (புறம். 210)

என்புழி ‘அன்னோர்’ என்பது உவம உருபாகிய இடைச்சொல் முதல் நிலையாகப் பிறந்த பெயர். இனிச் சிறுபான்மை ஏளன யுருபுகள் இத்தொகைக்கண் விரியுமாறு உவம இயலுள் காண்க.

*சேனாவரையர் இவற்றை உவம உருபு அன்று என்றும், உவம உருபுகளை இரண்டாவது கொண்டு முடியாது என்றும் கூறினாரால் எனின், அவர் ஆசிரியர் கருத்தும் சான்றோர் செய்யுள் வழக்கமும் உணராமல் கூறினார் என்பது இக்கூறியவாற்றான் உணர்க.

வெள்

இஃது உவமத் தொகையாமாறு கூறுகின்றது.

இ-ள் : உவமத் தொகையாவது உவம உருபுத்தொடர்ப் பொருள் போன்று பொருள் உணர்த்துவதாம், எ-று.

.......................................................

உ-ம் : புலிப்பாய்த்துள் மழைவண்கை
  துடி நடுவு, பொன்மேனி

எனவரும். இத்தொகைச் சொற்கள் முறையே புலிப்பாய்த்துள் அன்னபாய்த்துள், மழையன்ன வண்கை, துடியன்ன நடுவு, பொன்னன்ன மேனி எனத் தம் விரியாக அமைந்த தொடர்களின் பொருளை உணர்த்தியவாறு காண்க.

ஆதி

உவமத் தொகை என்பது உவம உருபு மறைந்தும்
உவம உருபு இருப்பது போல் பொருள் தந்து நிற்பது.
அன்னநடை - போல, போன்ற மறைந்தது.
பவளவாய், குருவி கூப்பிட்டான் - போல் மறைந்தது.
‘உவமை உருபு மறைதொடர் உவமத் தொகையே’

என்பது தெளிவானவிதி.


* சேனாவரையர் கூறியதாக உள்ள இக்கருத்து அவர் உரையில் காணப்படவில்லை. நச்சினார்க்கினியர்க்குக் கிடைத்த ஓலைச் சுவடியில் இருந்திருக்கலாம்-சிவ.