காலத்தியலும் எனப் பொது வகையாற் கூறியவதனான் மூன்று காலமும் கொள்க. தொகுதி காலத்தியலும் எனவே, அவ்வினை பிரிந்து நின்ற வழித் தோன்றாது தொக்கவழித் தொகையாற்றலாற் காலந்தோன்றும் என்றவாறாம். 1ஈண்டு வினையென்றது எவற்றையெனின், வினைச்சொற்கும் 2வினைப் பெயர்க்கும் முதல் நிலையாய், உண், தின், செல், கொல் என வினைமாத்திரம் உணர்த்தி நிற்பனவற்றையென்பது. இவற்றை வடநூலார் தாது என்ப. உ-ம் : ஆடரங்கு, செய்குன்று, புணர்பொழுது, அரிவாள், கொல்யானை, செல் செலவு என வரும். காலம் உணர்த்தாது 3வினைமாத்திரம் உணர்த்தும் பெயர் நிலப்பெயர் முதலாகிய பெயரோடு தொக்குழி்க் காலம் உணர்த்தியவாறு கண்டுகொள்க. காலம் உணர்த்துகின்றுழிப் பெயரெச்சப் பொருளவாய் நின்றுணர்த்தும் என்பது, ‘செய்யுஞ் செய்த வென்னுங்கிளவியின்-மெய்யொருங்கியலுந் தொழில் தொகு மொழியும் (எழு. 482) என்பதனாற் கூறினார். தொகைப் பொருளாகிய தாம் பிரிந்தவழிப் பெறப்படாமையின் ஆசிரியர் இவற்றைப் புணரியல் நிலையிடை யுணரத் தோன்றா (எழு. 482) என்றார். அதனான் இவை தஞ்சொல்லான் விரிக்கப் படாமையிற் பிரிவில் ஒட்டாம்.
1. உண் என்னும் முதல் நிலை (பகுதி) யடியாக உண்டான் உண்டேன் உண்டாய் முதலிய வினைச்சொற்களும், உணல் எனும் தொழிற் பெயரும் தோன்றுதல் காண்க. பிறவுமன்ன. 2. வினைப்பெயர் என்றது தொழிற் பெயரை. வினையாலணையும் பெயரையுமாம். 3. வினைமாத்திரம் உணர்த்தும் பெயர் என்றது முதல் நிலையை. வினைச்சொற்களின் முதல் நிலைகள் பெயர்களே என்பது சேனா வரையர் கருத்து. |