பக்கம் எண் :

130தொல்காப்பியம்-உரைவளம்

1பெயரெச்சம் நின்று தொக்கது என்றாரால் உரையாசிரியர் எனின், அற்றன்று; ஆசிரியர் இவற்றைப் பிரித்துப் புணர்க்கப்படா, வழங்கியவாறே கொள்ளப்படும் என்றது பிரித்தவழித் தொகைப் பொருள் சிதைதலானன்றே? கொன்றயானை என விரிந்தவழியும் அப்பொருள் சிதை வின்றேல் ‘புணரியல் நிலையிடை யுணரத்தோன்றா’ (எழு. 482) என்றற்கோர் காரணம் இல்லையாம். அதனாற் பெயரெச்சம் நின்று தொகுதல் ஆசிரியர் கருத்தன்மையின் உரையாசிரியர்க்கும் அது கருத்தன்றென்க. அல்லதூஉம், ஆகுபெயர் உணர்த்தியவழி வினைத்தொகையுளப்பட 2‘இருபெயரொட்டும்’ (சொல். 114) என்றாராகலானும் வினை நின்று தொகுதல் அவர்க்கும் கருத்தன்மையறிக.

3அஃதேல், வினைத் தொகைக்கு முதல் நிலை பெயராமன்றோவெனின், உரிஞ் என்பது முதலாயினவற்றைத் தொழிற்பெயர் என்றாராகலின் தொழில் மாத்திரம் உணர்த்துவனவெல்லாம் தொழிற்பெயர் என்பது ஆசிரியர் கருத்தென்க.


1. ‘பெயரச்சம் நின்று தொக்கது’ என்ற தொடர் இளம்பூரணத்தில் இல்லை. அடுத்த சூத்திரவுரையில் “கொல்யானை என்புழிக் கொல்லும் என்னும் வினைச்சொல் ஒருகூறு நிற்ப ஒருகூறு தொக்கமையின் வினைத்தொகையாயிற்று” என்று காணப்படுதலின் சேனாவரையர் இவ்வாறு எழுதினார்.

2. இருபெயரொட்டு என்றது அன்மொழித்தொகையை என்பது சேனாவரையர் கருத்து. அன்மொழித்தொகைக்குக் காரணமான வேற்றுமை, பண்பு, உம்மைத் தொகைகளின் நிலைமொழி பெயர். அவ்வாறே வினைத் தொகையின் நிலை மொழியும் பெயராம். வினைச்சொல்லின் உறுப்புகள் (காலம், விகுதி முதலியன) தொகுமேயன்றிப் பெயர்ச்சொல் தொகுவதில்லை. அதனால் வினைத்தொகையின் நிலை மொழி பெயராதலின் அது தொகுவது இல்லை.

3. இக்கருத்தை நச்சினார்க்கினியர் மறுப்பர்; ஆண்டுக்காண்க.