தெய் வினைத்தொகையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : வினையின் தொகுதி காலச் சொல்லோடே நடக்கும், எ-று. வினைச் சொல்லாவது தொழிலும், காலமும், பாலும் உணர்த்தலின் பாலுணர்த்துஞ் சொல் முற்றுச் சொல்லாகி நின்று தொகை நிலையாகாமையானும், பால்காட்டாத வினையெச்சம், பெயரெச்சம் என்னும் இரண்டினுள்ளும் வினையெச்சம் முற்றுவினைச்சொல்லோ டல்லது முடியாமையானும், ஈண்டுத் தொகுவதும் விரிவதும் பெயரெச்சம் என்று கொள்க. அது தொகுங்காலத்துக் காலப் பொருளை யுணர்த்துஞ் சொல்லே தொகுவதும் விரிவதும் என்று கொள்க. தொழிலும் பொருளும் விட்டிசைத்து நில்லாது ஒற்றுமைப்பட்டதனை வினைத் தொகை யென்றார். உ-ம் ; கொல்லும்யானை, கொன்றயானை; உண்ணும் நீர்; உண்டநீர்; அரியும்வாள், அரிந்தவாள்; செல்லும் இடம், சென்றஇடம்; உண்ணும் பொழுது, உண்டபொழுது; கொல்லும் கொலை, கொன்ற கொலை என்பன, கொல்யானை உண்நீர், அரிவாள், செல்லிடம், உண்பொழுது, கொல்கொலை எனத்தொகும். பிறவும் அன்ன. நச் இது வினைத்தொகை கூறுகின்றது. இ-ள் : வினையின் தொகுதி-வினைச் சொல்லினது ஈறாய்த் தொக்கு நிற்கும் எழுத்துக்கள், காலத்து இயலும்-காலத்தின் கண்ணே தொக்கு நிற்கும், எ-று. வினை என்றது உண், தின் முதலிய முதல் நிலைகளை. அவை ஈண்டும் ஆகுபெயராய்த் 1தம்மாற் பிறந்த பெயரெச்சத்தை
1. தன்னாற்பிறந்த - பாடம். |