வினைத்தன்மை அதாவது காலங் காட்டும் நிலை தொக்கது எனக்கொள்ளல் வேண்டும். வேற்றுமைப் பொருளை விளக்கும் உறுப்பு (ஐ முதலிய உருபுகள்) தொக்கது வேற்றுமைத்தொகையானாற் போல வினைப் பொருளைத்தரும் உறுப்பு (காலம் காட்டுவன) தொக்கது வினைத்தொகை யெனப்பட்டது. உரையாசிரியர் “பெயரெச்சம் நின்று தொக்கது வினைத்தொகை” என்பது உரையாசிரியர் கருத்து. ‘உயர்ந்த மரம்’ என்ற விடத்து ‘உயர்ந்த’ என்பது இறந்த காலமும் ஈற்று அகரமாகிய பெயரெச்ச உறுப்பும் கொண்ட வினைச் சொல். இச்சொல்லில் உள்ள காலங் காட்டும் உறுப்பு (‘த்’ இடை நிலை) பெயரெச்ச உறுப்பும் அகர விகுதி) மறைந்து ‘உயர் மரம்’ என வருவது வினைத் தொகை என்பதும், உயர் மரம் என்பது உயர்ந்த மரம் எனப் பிரிக்கப்படும் என்பதும் அவர்கருத்து. சேனா வரையர் வினைத் தொகையைப் பிரிப்பது கூடாது என்பதும், பிரித்தால் பொருள் சிதையும் என்பதும் சேனாவரையர் கருத்து. வினைத் தொகை காலம் காட்டுவது எனக் கூறவந்த அவர், “வினையின் தொகுதி காலத்தியலும் எனவே, அவ்வினை விரிந்து நின்றவழித் தோன்றாது தொக்கவழித் தொகையாற்றலால் காலந்தோன்றும் என்றவாறாம்” என்றும், “காலம் உணர்த்துகின்றுழிப் பெயரெச்சப் பொருளவாய் நின்றுணர்த்தும் என்பது” என்றும் எழுதினார். பெயரெச்சச் சொல்லாக விரிந்து நின்று உணர்த்தும் ‘என்னாது’, பெயரெச்சப் பொருளவாய் நின்றுணர்த்தும்’ என்றது காணத்தக்கது, தம்கொள்கைக்கு ஆசிரியரையே சான்றாகக் கொண்டு, “ஆசிரியர் இவற்றை (வினைத் தொகை பண்புத் தொகைகளை) பிரித்துப் புணர்க்கப்படா; வழங்கியவாறே கொள்ளப்படும் என்றது (தொல். எழு. 482) பிரித்தவழித்தொகைப் பொருள் சிதைதலானன்றே? கொன்றயானை என விரித்த வழியும் அப்பொருள் சிதை வின்றேல், “புணரியல் நிலையுணரத் தோன்றா’ என்றதற்கோர் காரணம் இல்லையாம்; அதனால் பெயரெச்சம் நின்று தொகுதல் ஆசிரியர் கருத்தன்மையால் உரையாசிரியர்க்கும் அது கருத்தன் றென்க”. |