என்றெழுதிக் காட்டினார். இதில் உள்ள ஒரு வியப்பு உரையாசிரியர்க்கும் அது கருத்தன்று என்று கூறியதே. இரு பெயரொட்டு தொல் காப்பியர் ஆகு பெயரிலக்கணமாக ‘முதலிற்கூறும் சினையறி கிளவியும்’ (சொல். வேற். மய. 31) என்னும் சூத்திரத்தில் இருபெயரொட்டு நிலையிலும் ஆகு பெயர் வரும் என்றார். அது இருபெயரொட்டாகு பெயர் எனப்படும். இவ்விருபெயரொட்டாகு பெயர் என்பது அன்மொழித் தொகையேயாம் என்பது சேனாவரையர் கருத்து. இதை அன்மொழியாகு பெயர் என்றும் கூறுவர். இருபெயரொட்டாகு பெயரும் அன்மொழித் தொகையும் ஒன்றே என்றும், ஆகு பெயர் நிலையில் ஆகுபெயர் எனவும், தொகை நிலையில் அன்மொழித் தொகையெனவும் பெயர் பெறும் என்றும் அவர் கூறுவர். உரையாசிரியர்க்கும் இதுவே கருத்தாதல் வேண்டும்என நாம் கருதலாம். ஏன்எனின், இரண்டும் வேறு வேறே எனக் கொண்டிருப்பரேல் சேனாவரையர் அதை எழுதி மறுத்திருப்பர். அதனால் உரையாசிரியர்க்கும் இரண்டும் ஒன்றே என்ற கருத்துண்டு என்னலாம். ஐந்தொகை மொழி மேல் பிற தொகல் அன்மொழியாகலின் அவ்வைந் தொகைகளின் பின்முன் மொழிகள் பெயராதலின் அவை இருபெயரொட்டு எனப்பட்டன. இக்கருத்தை உரையாசிரியர் கொண்டிருந்தவராயின் வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகிய ஆகு பெயர்க்கும் முன் மொழியும் பின் மொழியும் பெயர்ச் சொற்களே என்பது அவர்க்கும் உடன்பாடாம். அப்படியாயின் பெயரெச்சம் நின்று தொக்கது வினைத் தொகை என்றால் பெயரெச்சத் தொடரின் முன்மொழி வினைச்சொல் ஆதலின் இருபெயரொட்டு என்பதற்கு மாறுபடும். அதனால் நான் உரையாசிரியர்க்கும் கருத்தன்று என்றார் சேனாவரையர். “அல்லதூஉம் ஆகு பெயர் உணர்த்தியவழி வினைத்தொகை யுளப்பட இருபெயரொட்டும் என்றாராகலானும் வினை நின்று தொகுதல் அவர்க்கு (தொல்காப்பியர்க்கு)க் கருத்தன்மை யறிக” என்ற கருத்தையும் எழுதினார். (இதிலும் உரையாசிரியர்க்கும் கருத்தன்று என்று கொள்ளல் வேண்டும்) |