இதுவென ஒன்றனை யொன்று விசேடித்து இரு சொல்லும் ஒரு பொருள்மேல் வரும் ‘இயல்பையுடைய எல்லாத் தொகைச் சொல்லும் பண்புத் தொகையாம் என்றவாறு. நுதலி என்னும் சினைவினை யெச்சம் வரும் என்னும் முதல் வினையோடு முடிந்தது. ‘இயற்கை’ என்றது தொக்குழிப் பண்புடைய தனைக் குறித்தல், அத்தொகைச் சொல்லது இயல்பு என்பதல்லது காரணங் கூறப்படாது என்றவாறு. தொகைக் கண்ணல்லது அச்சொல் தனிநிலையாய், உண் தின், செல், கொல் என்பனபோலப் 3பொருளுணர்த்தாமையின் பண்புத் தொகையும் வினைத்தொகைபோலப் பிரிக்கப் படாதாம். உ-ம் : கருங்குதிரை யென்பது வண்ணப் பண்பு, வட்டப் பலகை என்பது வடிவு நெடுங்கோல் என்பது அளவு. தீங்கரும்பு என்பது சுவை. அவை கரிதாகிய குதிரை, வட்ட மதாகிய பலகை எனப் 4பண்புச் சொல்லும் பண்புடைப் பொருளே குறித்தலான் இரு சொல்லும் ஒரு பொருளவாய் ‘இன்னது இது’ என ஒன்றையொன்று பொதுமை நீக்கியவாறு கண்டு கொள்க, பிறவு மன்ன. அன்ன பிறவும் என்றதனான் நுண்ணூல், பராரை, மெல்லிலை, நல்லாடை என்னுந் தொடக்கத்தன கொள்க.
3. ‘கருங்குதிரை’ ‘செந்தாமரை என்பனவற்றில் ‘கரும்’ ‘செம்’ என்பன தனித்துப் பொருளுணர்த்தாமையறிக. 4. ‘கருங்குதிரை’ என்பதில் உள்ள ‘கரும்’ எனும் பண்பும் ‘கரிது’ என அப்பண்புடைய பொருளையே (குதிரையையே) குறித்தது. குதிரையானது கரியதன்மையுடையது என்னும் பொருளைக் ‘கரும்’ என்பது குறித்தலின் ‘கரும்’ என்பது இன்னது எனப்படும். குதிரை என்பது இது எனப்படும். குதிரை எத்தகையது எனின் கரிது என்றும் கரிது எது எனின் குதிரை என்றும் ஒன்றை யொன்று விசேடித்து நின்றன - அதாவது பொதுமை நீக்கின. கரிது என்பது வெண்குதிரையை நீக்கியும் குதிரை என்பது கருநிறமுள்ள யானை முதலிய பிறபொருளை நீக்கியும் ஒன்றையொன்று விசேடிக்கின்றன. |