நீக்கிற் றென்பாருமுளர். 7உயர் சொற்கிளவி, இடைச்சொற்கிளவி, உரிச்சொற்கிளவி என்புழியும், உயர்சொல், இடைச் சொல் உரிச்சொல் என்பன சொல்லென்பதன்கட் கருத்துடையவன்றிக் குறிமாத்திரமாய், உயர்வு, இடை, உரி என்ற துணையாய் நின்றனவாகலின், சாரை என்பது பாம்பை விசேடித்தாற்போல அவை கிளவி என்பதனை விசேடித்து நின்றன வென்பது 8அவ்வாற்றான் அமைவுடைய வாயினும் சூத்திரமாகலின் உயர் சொல், இடைச்சொல், உரிச்சொல் எனவே அமையும்; கிளவி என்பது மிகை எனின், மிகையாயினும் இன்னோரன்ன அமைவுடைய வென்ப துணர்த்துதற்கு அவ்வாறோதினார் என்பது. தெய் பண்புத் தொகையாமாறுணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : வண்ணம், வடிவு, அளவு, சுவை என்பனவற்றினும், அத்தன்மைய பிறவுமாகி ஒரு பொருளினது குணத்தைக் கருதி இன்னது இது என ஒன்றையொன்று விசேடித்து வரும் இயல்பினையுடைய எல்லாச் சொல்லும் பண்புத் தொகையாம், எ-று.
7. உயர் சொற்கிளவி என்பதில் உயர்சொல் என்பது உயர்வு என்னும் பொருள் தருவது. (சொல் என்பது வாளா நின்றது.) உயர்கிளவி எனத் தொடர்வது. எனவே உயர்சொல் என்பது ஒரு சொல்லாய்க் கிளவி என்பதை விசேடித்தது. இப்படிப் பிறவும் கொள்க. கிளவியாக்கம் ‘ஒருவரைக்கூறும் பன்மைக் கிளவியும்’ (27) என்னும் சூத்திரத்தில் “உயர் சொற் கிளவியென்பது கூறியது கூறலன்மை பண்புத்தொகையாராய்ச்சிக்கட் சொல்லுதும்” எனக் கூறியதை இங்கே காண்க. 8. உயர்சொல் என்றே ஓதலாம். கிளவி என்பது தேவையில்லை. உயர்சொல் என்று சொல்வதையே உயர்சொற்கிளவி என்றும் சொல்லலாம் என்பதற்கு உயர் சொற்கிளவி என்றார் ஆசிரியர். |