பக்கம் எண் :

150தொல்காப்பியம்-உரைவளம்

ஐம்பால் அறியும் பண்புதொகு மொழியும்”       (குற்றி. 77)

என்புழிப் ‘பண்புத்தொகை ஐந்து பாலையும் உணர நிற்றலின், அங்ஙனம் நின்றன பிரித்தும் புணர்த்தற்கு இயையா’ என்றமையான், ஈண்டும் அதற்கு ஏற்ப ‘இயற்கை’ என்றார். ‘ஐம்பாலறியும் பண்புதொகு மொழியும்’ என்றதன் பொருள் ‘ஐந்து பாலையும் ஒருவன் அறிதற்குக் காரணமாகிய பண்புச்சொல் தொக்க தொகைச் சொல்லும்’ என்றவாறாம். பண்பு உணர்த்துகின்ற 1ஐம்பால் ஈறுகள் தொக்கு நின்றே விரியும் என்பது உணர்த்துதற்கு 2அவ்வாசகம் தோன்ற ‘இன்னது’ என்றார். 3 ஐம்பாலும் பொருள் என்றால் அஃறிணையாய் அடங்கும் ஆதலின் பொருளாக்கி ‘இது’ என்று அஃறிணையால் கூறினார். இந்நான்கனுள் வண்ணமும் அளவும் சுவையும் ஐம்பாற்கண்ணும் வரும்.

உ-ம் : வண்ணம் : கரும்பார்ப்பான், கரும்பார்ப்பனி, கரும்பார்ப்பார், கருங்குதிரை, கருங்குதிரைகள் என்னும் பண்பு உணர்த்தும் ஈறுகள் தொக்கனவற்றை விரிப்புழிக் கரியனாகிய பார்ப்பான், கரியளாகிய பார்ப்பினி, கரியராகிய பார்ப்பார், கரியதாகிய குதிரை, கரியனவாகிய குதிரைகள் எனப் பண்பு உணர்த்தும் ஐம்பால் ஈற்றினையும் விரித்தவாறு காண்க. கரியபார்ப்பான் என்பது 4ஈறு தோன்றாத பெயரெச்சக் குறிப்பாய் நிற்கும். இனி, வெம்மை முதலியவற்றிற்கும் இவ்வாறே ஒட்டுக. இவற்றுள் ‘கரு’ ஒழிய 5ஏனைய தொக்கவாறு காண்க. 6இவற்றுள் அஃறிணைக்கண் வரும் ஈறுகள் பண்புகொள் பெயராய் நிற்குமாறும் உணர்க.


1. ஐம்பால் ஈறுகள் : ன், ள். ர். து. அ என்பன.

2. அவ்வாசகம்-பாலுணர்த்தும் ஈறுடைய சொல். இன்னது என்பதில் ‘து’ ஈறு ஒன்றன் பாலையுணர்த்தும்.

3. இன்னன் இவன் இன்னள் இவள் இன்னர் இவர் இன்னன இவை எனக் கூறாமல் இன்னது இது என ஒன்றன் பால் வாசகம் மட்டும் ஏன் கூறினார் என்றால் ஐந்து பால்களுமே பொருள் எனப்படுதலின் யாவறையும் அடக்கி அஃறிணை வாசகத்தான் இன்னது இது எனக் கூறினார் ஆசிரியர்.

4. ஈறு-னகரஒற்று.

5. ஏனைய-பாலுணர்த்தும் ஈறுகள்.

6. விளக்கமில்லை.