பக்கம் எண் :

பண்புத் தொகை சூ. 20153

உயர்திணை என்பது வினைத்தொகையோ பண்புத்தொகையோ எனின், ‘உயர்’ என்னும் முதல் நிலை நின்று ‘உயர்ந்ததிணை’ என அகர வீற்றுப் பெயரெச்சமாய் இறந்தகாலம் தொக்கு நிற்றலின், வினைத் தொகையாம். இதற்கு ஏனைக் காலமும் தொகுமாறு அறிக. இதனைப் பண்புத் தொகையாக்கி விரிக்குங்கால், ‘கரியதாகிய குதிரை’ என விரித்தலாற் போல விரியாது ‘உயர்ந்ததாகிய திணை’ என விரிக்க வேண்டும். அங்ஙனம் விரிந்துழி, அஃது ‘உயர்’ என்னும் முதல் நிலைப் பின் வந்த தகர அகரம் இறந்த காலம் உணர்த்தியே நிற்றலின் பண்புத்தொகை யாகாமையுணர்க என்னை? பண்பும் வினைக்குறிப்பும் முக்காலமும் புலப்படாமை நிற்கும் என்றே முற்கூறலின், அன்றியும், காலம் புலப்பட நின்றதன்மேல் பண்பு கொள் பெயர் விரியாமை யுணர்க.

இனி, ‘அன்னபிறவும்’ என்றதனான், நுண்ணூல், பராரை, நல்லாடை, வெந்தீ, தண்ணீர், நறும்பூ என்னுந் தொடக்கத்தன கொள்க.

11மெல்லிலை வினைத் தொகையுமாம்.

12இத்தொகையை வேற்றுமைத் தொகை என்பார். ‘கருமையையுடைய பார்ப்பான் என்று பண்புப் பெயராக்கி விரிப்பர். அது பொருந்தாது. ‘கரு’ என்னும் முதல் நிலை பண்பினையுணர்த்தி ‘இதனையுடையது இது’ என நில்லாது ‘கரியது’ எனப்பண்பு உடைய பொருளை நோக்கி நிற்றலின், வேற்றுமைப் பொருண்மை ஆண்டு இன்று என உணர்க.

‘என்ன கிளவியும்’ என்றதனால், சாரைப் பாம்பு, கேழற்பன்றி, வேழக் கரும்பு, இடைச் சொற்கிளவி, உரிச்சொற்கிளவி


11. மெல்லிலை-மெல்லிதாகிய இலை-பண்புத்தொகை; மெல்லென்ற மெல்லென்கிற மெல்லென்னும் இலை-வினைத்தொகை.

12. கருமையையுடைய பார்ப்பான் என விரிப்பின் கரு என்பது உடைய என்பதை நோக்கும்; பார்ப்பானை நோக்காது; அதனால் நேரா பார்ப்பானை நோக்கும் நிலையில் பொருளமைவதால் பண்புத்தொகையாகுமே தவிர வேற்றுமைத் தொகையாகாது.