சுந்தர-சண்முகனார் நன்னூல் உரையாசிரியர்களும் தொல்காப்பிய வுரையாசிரியர்களும் பண்புத் தொகையில் ஏதேதோ தொக்கதாகத் தத்தம் விருப்பம்போல் கூறியிருப்பவை பொருந்தா. பண்புத் தொகைகளில் தொக்கிருப்பன எவை என்பதைத் தொல்காப்பியர் தெளிவாக் கூறியுள்ளார். கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது ஏன்? “வண்ணத்தின் வடிவின்.....பண்பின் தொகையே” என்பது நூற்பா. தொக்கனவாகத் தொல்காப்பியர் கூறியிருப்பவை வண்ணம் வடிவு அளவு சுவை, அவை போன்ற இன்னும் பிறவுமாம்’. அன்ன பிறவும் என்பதில் நன்மை தீமை வெம்மை மென்மை மேன்மை உண்மை பெருமை தன்மை வன்மை கீழ்மை முதலிய இயல்பு (தன்மை)ப் பண்புகளை அடக்கலாம். எனவே தொல்காப்பியர் கூறியுள்ள நான்கனோடு இயல்பு என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். வண்ணம் வடிவு முதலியவற்றை எண்ணியே நன்னூலார், “பண்பை விளக்கும் மொழி” (நன்) என்று கூறியிருக்க வேண்டும். ஈண்டு ‘விளக்கும்’ என்னும் சொல்லின் பொருளை ஊன்றி நோக்க வேண்டும். ‘ஆகிய’ என்பது விளக்கம் ஆகாது. கருவண்ணக் குதிரை என்பது கருங்குதிரை எனத்தொக்கது-இது வண்ணம். வட்டவடிவப் பலகை என்பது வட்டப்பலகை எனத் தொக்கது-இது வடிவு. குறுகிய அளவுகோல் என்பது குறுங்கோல் எனத்தொக்கது-இது அளவு. தீஞ்சுவைக் கரும்பு என்பது தீங்கரும்பு எனத் தொக்கது-சுவையிது. நல்ல தன்மை (இயல்பு) உள்ள மாணாக்கர் என்பது நன்மாணாக்கன் எனத் தொக்கது-இயல்பு இது. ஆக வண்ணம் வடிவு அளவு சுவை இயல்பு முதலியவற்றைக்குறிக்கும் சொற்கள் தொக்கிருப்பன பண்புத்தொகையாம். பண்புத் தொகையைப் பொருள் சிதையாமல் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களால் விரித்துக் கொள்ளலாம். ....................................... 1) பண்பு பண்பிப் பண்புத்தொகை-செந்தாமரை |