பக்கம் எண் :

162தொல்காப்பியம்-உரைவளம்

நிறைப் பெயர் பற்றித் தொக்கது : தொடியரை என்பது. அது விரியுங்கால் தொடியும் அரையும் எனவிரியும்.

2எண்ணின் பெயர் பற்றித் தொக்கது : பதினொன்று என்பது. அது பத்தும் ஒன்றும் என விரியும்.

மற்றும் ‘பலபெயர்’ என அமையாதே ‘இருபெயர்’ என வேண்டியது என்னை? இரண்டையும் பல என்பவால் எனின், அற்றன்று; இரண்டனையும் பன்மை யென்று வேண்டான் இவ்வாசிரியன் என்பது. ஆயின் மேல்.

‘ஒன்றறி சொல்ல பலவறி சொல்’ (கிளவியாக். 3) என்புழி இரண்டையும் பல என்று வேண்டினானால் எனின், அதுவிகாரம்; என்னை? இரண்டும் இரண்டிறந்த பன்மையும் வந்தன, போயின என ஒரு பன்மைச் சொல்லே ஏற்குமாகலின், ஆண்டு இரண்டினைப் பலவற்றுள் அடக்கிக் கூறினார் என்பது.

சேனா

இ-ள் : இருபெயர் முதலாகச் சொல்லப்பட்ட அறுவகைச் சொற்றிரளையும் தனக்குச் சார்பாகக் குறித்து நிற்கும் உம்மைத் தொகை, எ-று.

உ-ம் : ‘உவாப்பதினான்கு’ என்பது இரு பெயரானாயஉம்மைத் தொகை. ‘புலிவிற்கெண்டை’ என்பது பல பெயரானாய உம்மைத் தொகை. ‘தூணிப்பதக்கு’ என்பது அளவுப் பெயரானாய உம்மைத் தொகை. ‘முப்பத்து மூவர்’ என்பது எண்ணியற் பெயரானாய உம்மைத்தொகை. ‘தொடியரை’ என்பது நிறைப் பெயரானாய உம்மைத்தொகை. ‘பதினைந்து’ என்பது எண்ணுப் பெயரானய உம்மைத்தொகை.

இனி அவை விரியுங்கால், உவாவும் பதினான்கும் எனவும், புலியும் வில்லும் கெண்டையும் எனவும், தூணியும் பதக்கும் எனவும், முப்பதின்மரும் மூவரும் எனவும், தொடியும் அரையும் எனவும், பத்தும் ஐந்தும் எனவும் விரியும்.


2. எண்ணின் பெயர் என்பது ஓர் எண்ணினது பெயர். 11 இந்த எண் பத்தும் ஒன்றும் சேர்ந்ததாதலின் பதினொன்று எனப்பட்டது.