வேற்றுமைத் தொகை முதலாயின பல சொல்லாற் றொகுதல் சிறுபான்மை; அதனான் உம்மைத்தொகை இருசொல்லானும் பல சொல்லானும் ஒப்பத் தொகும் என்பது அறிவித்தற்கு இருபெயர் பலபெயர் என்றார். கற்சுனைக் குவயைிதழ், பெருந்தோட்பேதை எனப் பிறதொகையும் பெரும்பான்மையும் பல சொல்லான் வருமால் எனின், கல் என்பதும் சுனை என்பதும் ‘கற்சுனை’ எனத்தொக்கு ஒரு சொல்லாய்ப் பின் ‘குவளை’ என்பதனோடு தொக்கு ஒருசொல்லாய்ப் பின் ‘இதழ்’ என்பதனோடு தொக்குக் ‘கற்சுனைக் குவளையிதழ்’ என்றாயிற்று. பெருந்தோள் என்னும் தொகை ஒருசொல்லாய்ப் ‘பேதை’ என்பதனோடு தொக்குப் ‘பெருந்தோட் பேதை’ என ஒன்றாயிற்று. அவை இவ்வாற்றா னல்லது தொகாமையின் இருசொற் றொகையே யாம். 1புலிவிற் கெண்டை யென்புழி மூன்று பெயரும் தொகும் என்னாது முதற் பெயரொழித்தும், இறுதிப் பெயர் ஒழித்தும், ஏனையிரண்டும் தம்முட்டொக்கு ஒரு சொல்லாய்ப் பின்மற்றையதனோடு தொகும் எனின், முன் தொகும் இரண்டற்கும் ஓரியைபு வேறுபாடின்மையானும் இரு தொகைப்படுத்தல் பலசெய்கைத் தாகலானும், அவை மூன்று பெயரும் ஒருங்கு தொக்கன எனவே படும் என்பது.
1. புலிவிற் கெண்டை : முதற்பெயர் ஒழிந்துத் தொகுவது புலி + விற்கெண்டை இறுதிப் பெயர் ஒழிந்துத் தொகுவது புலிவில் + கெண்டை. ‘கற்சுனைக்குவளையிதழ்’ என்பதில் கற்சுனை என்பதற்குக் கல்லில் உள்ள சுனை என ஓர் இயைபும் சுனைக்குவளை என்பதற்குச் சுனையில் உள்ள குவளை என்ற இயைபும், குவளை இதழ் என்பதற்குக் குவளையது இதழ், என்ற இயைபும் ஆகிய வேறுபாடுகள் இருத்தல் போலப் புலிவிற் கெண்டை’ என்பதில் புலிவில் என்பதற்கும் ஓர் இயைபு இல்லை; ‘விற்கெண்டை என்பதற்கும் ஓர் இயைபு இல்லை; அதனால் தனித் தனித் தொகையாக்கிச் சேர்த்தற்கு இயைபு வேறுபாடில்லை. அதனால் ‘புலிவிற்கெண்டை’ என்பது முன் இரண்டு சொல் தொக்கு ஒரு சொல்லாய்ப் பின்ஒரு சொல்லுடன் தொக்கது என்றற்கில்லை. தனித்தனிச் சொற்களாய் நின்றே தொக்கது என்ன வேண்டும். |