அளவின்பெயர் முதலாயின இருபெயராயல்லது தொகாவென வரை யறுத்தற்கு இருபெயர் பல்பெயரென அடங்குவனவற்றைப் பெயர்த்துக் கூறினார். கலனே தூணிப்பதக்கு, தொடியே கஃசரை, நூற்று நாற்பத்து நான்கு என்புழித் தூணிப்பதக்கு, கஃசரை, நாற்பத்து நான்கு என்பன ஒரு சொற்போல அளவுப் பெயரும் நிறைப் பெயரும் எண்ணுப் பெயருமாய் வழங்கப்பட்டு வருதலின் கலமுந்தூணிப்பதக்கும், தொடியும் கஃசரையும், நூறும் நாற்பத்து நான்கும் என இருமொழி நின்று தொக்கன வென்றலே பொருத்தம் உடைமை யறிக. உம்மைத்தொகை இன்ன பொருள்பற்றித் தொகும் என்னாது அவ்வறு கிளவியும் எனச் சொல்லேபற்றி ஓதினாரேனும், ஏற்புழிக்கோடல் என்பதனான் “உயர்திணை மருங்கின் உம்மைத்தொகையே பலர் சொல் நடைத்து” (சொல். 421) என்பதனான் எண்ணும்மைப் பொருட்கண் தொகும் என்பது பெறப்படும். 2எண்ணின்கண் வரும் இடைச்சொற் பலவேனும் தொக்கு நிற்கும் ஆற்றலுடையது உம்மைப் பெயராகலான் உம்மைத் தொகையாயிற்று. தெய் உம்மைத் தொகையாமா றுணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : இருபெயர் முதுலாகச் சொல்லப்பட்ட அறுவகையும் உம்மைத் தொகை, எ-று.
2. என்றா, எனா, என முதலிய இடைச்சொற்களும் எண்ணுப் பொருளில் வரும்; அவை மறைந்து வரும். தொடர்களை என்றாத்தொகை, எனாத் தொகை, எனத்தொகை எனப்பெயர் கொடாமல் உம்மை தொக்கி வரும் தொடர்கே உம்மைத்தொகை எனப்பெயர் கொடுக்கப்பட்டது. ஏன் எனின் தொக்கு நிற்கும் ஆற்றல் என்றா முதலியவற்றுக்கில்லை; உம்மைக்கேயுண்டு ஆதலின் என்க. |