பக்கம் எண் :

அன்மொழித் தொகை சூ. 22175

தகரஞாழல் என்பது உம்மைத் தொகை. இவையிற்றை யுறுப்பாக அமைக்கப்பட்ட சாந்தினையும் தகரஞாழல் என்பவாகலின் அன்மொழித் தொகையாயிற்று.

தூணிப்பதக்கு என்றவழி அளவிற்குப் பெயராத லன்றி அளக்கப்படும் பொருளுக்கும் பெயராயவழி அன்மொழித் தொகையாம். இவையிரண்டு சொல்லும் அன்மொழித் தொகைமேல் ஏறியவாறு கண்டுகொள்க. இஃது உம்மை பற்றி வந்தது.

பொற்றொடி என்பது வேற்றுமைத் தொகை. அதனையுடையாட்குப் பெயராகியவழி அன்மொழித் தொகையாம். ஈண்டுத் தொடிக்கு அடையாகி நின்ற பொன் தொடியையுடையாளது செல்வத்தைக் காட்டுதலின் இவ்விரண்டு சொல்லும் அதனையுடையானைக் குறித்தவாறும் அறிந்து கொள்க.

1துடியிடை யெனவும், தாழ்குழல் எனவும் உவமைத்தொகைப்புறத்தும் வினைத்தொகைப் புறத்தும் அன்மொழித்தொகை வருமால் எனின், துடி என்பதூஉம் தாழ் என்பதூம் இடை, குழல் என்பவற்றிற்கு அடையாகி வரினல்லது அவற்றையுடையாட்குப் பெயராகுங்கால் இறுதி நின்ற பெயர்ப் பொருண்மை வந்து ஏனைய வாராமையின் ஆகுபெய ரெனினல்லது அன் மொழித் தொகையாகாதெனக் கொள்க. அதனானேயன்றே இருபெயரொட்டும் என ஆகுபெயர்க்கண் எடுத்தோதுவாராயிற்று என உணர்க.


1. கடுங்கோல் என்பதில் கடுமை அரசன் மேல் நிற்கிறது. தகரஞாழல் என்பதில் தகரம் சாந்தைக் குறிக்கிறது. தூணிப்பதக்கு என்பதில் தூணி அதனளவுப் பொருளைக் குறிக்கிறது. துடியிடை என்பதில் துடியும், தாழ்குழல் என்பதில் தாழ் என்பதும் பெண்ணைக் குறிக்காமல் இடைக்கும் குழலுக்கும் அடையாய்வந்தன. அதனால் அன்மொழித்தொகை, உவமத்தொகை, வினனத்தொகை நிலைக்களனாகப் பிறத்தல் இல்லை. அவை அன்மொழியாகு பெயர் எனப்படும். இவ்விரண்டையும் இருபெயர் ஒட்டாகு பெயர் என ஆசிரியர் கூறினார், என்று உணர்க.