வெள் இஃது அன்மொழித் தொகையாமாறு கூறுகின்றது. இ-ள் : பண்புச்சொல் தொகவரும் தொகையின் கண்ணும் உம்மை தொக்க பெயர்க்கண்ணும் வேற்றுமை தொக்க பெயர்க்கண்ணும் இறுதிச் சொற்கள் நின்று நடப்பது அன்மொழித் தொகையாம், எ-று. ................................... நின்ற சொல்முன் வருஞ் சொல்லாகி வெளிப்பட நிற்பது அல்லாத மொழியொன்று, வேற்றுமைத்தொகை முதலிய தொகை நிலைத் தொடர்மொழிகளின் ஆற்றலால் அத்தொகை மொழிகளின் புறத்தே மறைந்து நிற்றலின் இத்தொகைக்கு அன்மொழித்தொகை என்பது பெயராயிற்று. ........................................ இச்சூத்திரத்தின்கண் சிறப்புடைய வேற்றுமைத் தொகையை முற்கூறாத முறையன்றிக் கூற்றினான் சொல்லா தொழிந்த உவமத்தொகையும் வினைத் தொகையும் பற்றி அன்மொழித்தொகை தோன்றும் எனக் கொள்வர் இளம்பூரணர். வினையின் தொகையினும் உவமத் தொகையினும் அன்மொழி தோன்றும் என்மனார் புலவர் என்றார் அவிநயனாரும். உ-ம் : பண்புத் தொகைபட அமைந்த ‘வெள்ளாடை’ என்னுஞ் சொல்லைப் படுத்தலோசையாற் கூறியவழி வெண்மையான ஆடையினையுடுத்தாள் எனப் புறத்தே ஒருசொல் தொக்கு நிற்றலின், இது பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகும். உம்மைத் தொகைபட அமைந்த ‘தகரஞாழல்’ என்பது தகரமும் ஞாழலும் விரவியமைந்த சாந்து எனப் புறத்தே பிறசொல் தொக்கு நிற்றலின் உம்மைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகும். |