பக்கம் எண் :

178தொல்காப்பியம்-உரைவளம்

வேற்றுமைத் தொகைபட அமைந்த ‘பொற்றாலி’ என்பது பொன்னாலாகிய தாலியினை அணிந்தாள் என ஒருசொல் தொக்கு நிற்றலின் வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகையாகும்.

உவமத்தொகைபட அமைந்த ‘அறற்கூந்தல்’ என்பது அறல்போலும் கூந்தலையுடையாள் எனப்புறத்தே ஒருசொல் தொக்கு நிற்றலின் உவமத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகும்.

வினைத்தொகைபட அமைந்த ‘திரிதாடி’ என்பது திரிந்த தாடியினையுடையான் என ஒருசொல் புறத்தே மறைந்து நிற்றலின் வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகும்.

ஆதி

பண்புத்தொகை, உம்மைத்தொகை, வேற்றுமைத்தொகைத் தொடர்மொழிகளின் ஈற்றில் மறைந்து ஏற்படுவதாகும் அன்மொழித்தொகை.

வெண்குடை-பண்புத்தொகை
கண்ணாடி கைப்பிரம்பு-உம்மைத்தொகை
பிரம்பு நாற்காலி-வேற்றுமைத்தொகை

இவற்றை.

அந்த வெண்குடை யார்? எனின் குடையையுடைய மனிதர் எனப் பொருளாகிட, மனிதர் எனும் அங்கு இல்லாத மொழியைத் தருவதால் அன்மொழித்தொகை.

அந்த கண்ணாடி கைப்பிரம்பு யார்? பிரம்பு நாற்காலி யார்? இவையும் பிரம்பு கொண்டவர் என்றும், நாற்காலியில் இருப்பவர் என்றும் மக்களை அறிவித்து நிற்பதால் அன்மொழித் தொகை.

எளிதாக விளக்கின் அன்மொழித்தொகை என்பது தொடர்மொழியில் வந்த ஆகுபெயர். ஆகுபெயர் தனிமொழி; அன்மொழித்தொகை தொடர்மொழி.