உதாரணம் : கிளி, மயில் என்பவற்றைக் ‘கிள்ளை’, ‘மஞ்ஞை’ எனச்சிறிதுநிற்பத் திரித்தும், அவற்றைத் ‘தத்தை’, ‘பிணிமுகம்’ எனப்பிறசொற் கொணர்ந்து முழுவதூஉம் திரித்தும் கூறுதல், மலைக்கு வெற்பு, விலங்கல், விண்டு என்பன முழுவதூஉத் திரித்தன. இவை ஒரு பொருள் குறித்த வேறு சொல். ‘உந்தி’ என்பது யாழ்பத்தலும், கொப்பூழும், தேர்த்தட்டும், கானியாற்றிடையும் உணர்த்துதல் முழுவதூஉந் திரிந்தது. இது வேறு பொருள் குறித்த ஒருசொல். ‘அளகு’ என்பது கோழி, கூகை, மயில் என்னும் மூன்று சாதியிற் பெண்பாற்கும் பெயராதலின், இதுவும் வேறு பொருள் குறித்ததாம். இவை முழுவதூஉந் திரிந்தன. இவையெல்லாம் பெயர்த்திரிசொல். 1கேட்டீவாயாயின், செப்பீமின், ஈங்குவந்தீத்தாய், புகழ்ந்திகு, மல்லரே, என்மனார், என்றிசினோரே, பெறலருங்குரைத்து என்பன போல்வன வினைத்திரிசொல், இவை சிறிது நிற்பத் திரித்தன. 2பைங்கண், பைந்தார், பச்சிலை, காரா, சேதா என்றாற் போலும் பண்புத் தொகையாகிய சொற்களைப் பசுமை, கருமை, செம்மை எனப் பண்புப் பெயராக நிறுத்தி, ஈற்றுயிர் மெய்யும் ஈற்றயல் உயிரும் கெட்டு வரு மொழிக்கு ஏற்ப ஒற்றுத்திரிந்தும்
1. கேட்பாய், செப்புமின், ஈங்குவந்தாய், புகழ்ந்தாரல்லரோ, என்ப, என்றார், பெறலரிது என்பன இவற்றின் இயற்சொற்கள். 2. பசுமை+ கண் = பசு + கண் - ப + கண் - பை+ கண் பைங் + கண் = பைங்கண். பசுமை + தார் இப்படியே பசுமை + இழை = பசு + இழை- பச் + இழை- பச்ச் + இழை = பச்சிழை கருமை +ஆ- கரு +ஆ- கர் +ஆ- கார் + ஆ-காரா.செம்மை + ஆ -செம் + ஆ- செத் +ஆ-சேத் +ஆ- சேதா. இப்படிப் பிரித்துத்திரித்தல் கூடாது. கூடும் என இலக்கணம் கூறியவர் நச்சினார்க்கினியருக்குப் பின் வந்த பவணந்தியார். “ஈறு போதல் இடையுகரம் இ ஆதல்” நன். ) என்பது அவர் சூத்திரம். |