அதனால் எந்த வகையிலும் உவமைத்தொகையும் வினைத்தொகையும் அன்மொழிக்கு உரியவாகா. பொற்றாலி என்பது வேற்றுமைத் தொகை. பொற்றாலி வந்தாள் என்னும்போது அது அன்மொழித்தொகை. இதில் ஓர் ஐயம் எழும். பொன் என்பது தாலியைத் தானே குறிக்கும் தாலியுடையாளைக் குறிக்காதே என்பது அது. அதற்குத் தெய்வச்சிலையார் பொன் என்பது தாலியுடையானது பெருஞ் செல்வத்தைக் குறித்தலின் அன்மொழித் தொகையாதற்குப் பொருந்தும் என்றார். எனவே தெய்வச்சிலையார் கூற்றை நாம் ஏற்றுக்கொண்டால் ஒரு சிக்கல் தீரும். ஆகுபெயரும் அன்மொழித் தொகையும் ஒன்றே என்பாரும் வேறு வேறு என்பாருமாக இருதிறத்தர் உளர். தனி மொழியில் வரும் ஆகுபெயரே யன்றித் தொகைநிலைத் தொடர்மொழியில் வரும் ஆகுபெயரும் உண்டு. அது முன்மொழி வருமொழியைத் தொடர வருமொழி மட்டும் தன்னோடு தொடர்புடைய வேறு பொருளைத் தருவது. உதாரணம் கருங்குழல் போல்வன நிலைமொழியும் வருமொழியும் இரண்டுமே வேறுபொருளாகிய அன்மொழியைக் குறிப்பின் அத்தொகை ஆகுபெயராகாது அன்மொழித் தொகையாம். இப்படிக் கொண்டால் ஐந்து தொகையாலும் ஆகுபெயர் வரும். உவமைத்தொகை வினைத்தொகை தவிர மற்றையன வற்றால் அன்மொழித் தொகை வரும் எனக் கொள்ளலாம். இத்தொகையாகு பெயர்களை அடையடுத்த ஆகுபெயர் என்னலாம். இங்கும் ஓர் சிக்கல் உண்டு. வகரக்கிளவி என்னும் இருபெயரொட்டாகுபெயரில் இருமொழிகளுமே வகரஎழுத்தினையுணர்த்தலின் அதனை அன்மொழித்தொகை என்னலாமோ என்பது அது. என்னலாகாது. சாரைப்பாம்பு என்பது இரு பெயரொட்டு. இதில் பாம்பு என்பது பாம்பையே குறிக்கும். வகரக்கிளவி என்பதும் இருபெயரொட்டு. ஆனால் இதில் கிளவி (=சொல்) என்பது சொல்லைக் குறிக்காது; எழுத்துக்கு ஆகி எழுத்தையே குறிக்கும். மற்றைத் தொகைகள் தொகை நிலையிலும் அன்மொழித் தொகை நிலையிலும் வரும். வகரக்கிளவி என்பது தனித்துத் தொகை நிலையில் வராது. ஆகுபெயராகவே தான் வரும். வேறுபாடு அறிக. |