பக்கம் எண் :

தொகைநிலைத் தொடரில் பொருள் சிறக்குமிடம் சூ. 23 185

தொகையும் அவற்றது பொருள் நிலை மரபும் ஒருவகையான் வேறாயினும் ஒற்றுமைபற்றி அவைதாம் என்றார்.

பொருள் நிற்றலாவது வினையோ டியையு மாற்றான் மேற்பட்டுத் தோன்றுதல்.

உ-ம் : வேங்கைப்பூ என்புழிப் பூவென்னும் முன்மொழிக்கண் பொருள் நின்றது. அது நறிது என்னும் வினையோடியையுமாற்றான் மேற்பட்டுத் தோன்றியவாறு கண்டுகொள்க. மேல் வருவனவற்றிற்கும் ஈதொக்கும், இடவகையான் முன் மொழியாயிற்று.

1‘அடைகடல்’ என்புழி அடையென்னும் பின்மொழிக்கண் பொருள் நின்றது. இடவகையாற் பின்மொழியாயிற்று. முன் பின் என்பன காலவகையால் தடுமாறி நிற்கும். கடலும் கடல் அடைந்த இடமும் கடல் எனப்படுதலின், ‘அடைகடல்’ என்பது ‘அடையாகியகடல்’ என இருபெயர்ப் பண்புத்தொகை. இனி வரையறையின்மையாற் சிறுபான்மை முன்மொழி பின்மொழியாகத் தொக்கதோர் ஆறாம் வேற்றுமைத்தொகையெனவும் அமையும்.

‘உவாப்பதினான்கு’ என்புழி இருமொழிமேலும் பொருள் நின்றது. தன்னின முடித்தல் என்பதனாற் பலபெயர்மேல் நிற்றலும் கண்டு கொள்க.


1. அடைகடல், அடை என்பது அடைந்த இடம் எனப்படும். கடல் அடைந்த இடம் கரை, எனவே கரையாகிய கடல் எனப்படும். இதுவே கடலாகிய கரை (கடலாகிய அடை) எனவும் கொள்ளப்படும். அடை கடல் என்பதை மேற்குறித்தவாறேதான் பொருள் கொள்ளல் வேண்டும் என்னும் வரையறையின்மையால் ‘கடல் அடை’ (கடலினதுகரை) என்பது, நகர்ப்புறம் புறநகர் எனமாறி நின்றாற்போல ‘அடைகடல்’ என நின்றது எனக்கொண்டு ‘கடலினது அடை’ என ஆறாம் வேற்றுமைத்தொகையெனக் கொண்டு அது ‘அடைகடல்’ என முன் பின்னாகமாறி நின்றது எனக்கொள்வதும் அமையும்.