பக்கம் எண் :

தொகைச் சொற்கள் ஒருசொல் தன்மையன சூ. 24191

திருந்தான் என முன்மொழி வினையாயவழி ஒரு வினைச்சொல் நடையவாதலும் கொள்க. அவை உருபேற்றலும் பயனிலைகோடலும் முதலாகிய பெயர்த்தன்மையும் பயனிலையாதலும் பெயர்கோடலும் முதலாகிய வினைத் தன்மையும் உடையவாதல் அவ்வச் சொல்லோடு கூட்டிக் கண்டுகொள்க.

நிலங்கடந்தான், குன்றத் திருந்தான் எனப் பெயரும் வினையும் தொக்கன ஒருசொல் நீர்மையிலவாகலின் தொகையெனப்படா 1என்பாரும் உளர். எழுத்தோத்தினுள், “பெயருந்தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப-வேற்றுமையுருபு நிலைபெறுவழியும்-தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும்” (எழு 182) என்றதனான் வேற்றுமையுருபு தொகப் பெயருந் தொழிலும் ஒருங்கிசைத்தல் ஆசிரியர் நேர்ந்தாராகலின், அவை தொகையெனவே படும் என்பது. கடந்தான் நிலம், இருந்தான் குன்றத்து எனபன ஒருங்கிசையாது 2பக்கிசைத்தலின் அவை தொகை யன்மை அறிக.

எல்லாத் தொகையும் ஒரு சொன்னடைய என்றதனான் தொகையல்லாத தொடர்மொழியுள் ஒருசொல்நடைய வாவன சிலவுள வென்பதாம். யானை கோடு கூரிது, இரும்பு பொன்


1. யாரெனத் தெரிந்திலது. பிற்காலச் சிவஞான முனிவர் இக்கருத்தினர். பெயரும் தொழிலும் பிரிந்திசைப்ப வேற்றுமையுருபு நிலைபெறு வழியும் நிலத்தைக் கடந்தான்.

பெயரும் தொழிலும் ஒருங்கிசைப்ப வேற்றுமையுருபு தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும்-நிலங்கடந்தான்.

‘பெயரும் தொழிலும் ஒருங்கிசைப்ப...........................தொகுதி’ என ஆசிரியர் கூறியதால் நிலங்கடந்தான் என்பதை ஒருசொல் என நேர்ந்தார் என்னலாம் என்பது கருத்து. நச்சினார்க்கினியர் உரை மாறுபாடு காண்க.

2. பக்கு இசைத்தல் - பரிவுபட்டு இசைத்தல்.