தொகைச் சொற்கள் ஒருசொல் தன்மையன சூ. 24 | 193 |
இ-ள் : எல்லாத் தொகையும்-இருமொழித் தொடரின் கண்ணும் பன்மொழித் தொடரின் கண்ணும் தொக்கு நிற்கும் எல்லாத் தொகைச் சொற்களும், ஒருசொல் நடைய-ஒருசொல் நின்று தன்னை முடிக்கும் சொற்களோடு முடியுமாறு போலத்தாமும் தம்மை முடிக்கும் சொற்களோடு முடிதலையுடைய, எ-று. அங்ஙனம் முடியுங்கால் ‘பெயரினாகிய தொகையுமாருளவே’ (வேற். 6) என்னுஞ் சூத்திரத்தால் தொகைச்சொல் இருவகைய என்றும் அவற்றுள் பெயரும் பெயரும் தொக்கன ஒரு சொல் நீர்மையவாய்ப் பயனிலை கொள்ளும் என்றும் கூறிய விதி ஒழிந்த இலக்கணங்கள் எல்லாம் ஈண்டுக்கொள்க. அவை, ‘யானைக்கோடு’ என்னும் பெயரினாகிய தொகை, ‘யானைக் கோட்டைக் குறைத்தான், ‘என உருபு ஏற்றலும், ‘நிலங்கடந்தான்’, ‘குன்றத்திருந்தான்’ என்னும் வினையினாகிய தொகைகளும் ஒரு முற்றுச் சொல்லாய்ச் ‘சாத்தன்’ என்னும் பெயர்கோடலும், ‘மா ஊர்ந்து போயினான்’ குன்றத்திருந்து போயினான்’ என வினையெச்சச் சொல்லாய் நிற்றலும், ‘மாஊர்ந்தசாத்தன்’, ‘குன்றத்திருந்த சாத்தன்’ எனப் பெயரெச்சச் சொல்லாய் நிற்றலும் ஆம். இவ்வினையின் ஆகிய தொகை, படுத்தல் ஓசையால் பெயராகியவழிப்பயனிலை கோடலும் கொள்க. எழுத்தினுள் ‘பெருந்தொழிலும்’ (புணரியல். 30) என்னுஞ் சூத்திரத்துள் 1‘பெயருந்தொழிலும் பிரிந்து இசைத்தவழியும் பெயரும் பெயரும் ஒருங்கு இசைத்த வழியும் வேற்றுமை தொக்கு நிற்கும் என்றலின், நிலங்கடந்தான், குன்றத்திருந்தான் எனப்பெயருந் தொழிலும் பிரிந்து இசைத்த வழியும் தொகையாதல் ஆசிரியர்க்குக் கருத்தாயிற்று. இப்பெயரும் வினையும் தொகுதல் உவமத்தொகைக்கும் வினைத்தொகைக்கும் கொள்க. இவை இருமொழித் தொடர், ‘உயர்சொற் கிளவி’ (கிளவி. 27) ‘இடைச்சொற் கிளவி’ (பெயரி. 5) ‘உரிச்சொற் கிளவி’ (உரி. 1) என்புழி உயர் சொல், இடைச்சொல், உரிச்சொல் என்னும்
1. பெயரும் பெயரும் ஒருங்கிசைத்தல் - மதிமுகம். பெயரும் வினையும் பிரிந்திசைத்தல்-நிலங்கடந்தான். சேனாவரையர் நிலங்கடந்தான் என்பது ஒருங்கிசைப்பதாகவும் நிலத்தைக் கடந்தான் என்பது பிரிந்திசைப்பதாகவும் கொண்டு கூறினார்; காண்க. |