பக்கம் எண் :

2தொல்காப்பியம்-உரைவளம்

யெச்சம் ஈண்டுணர்த்தலான் எச்சவிய லாயிற்றென்றல் பொருந்தாமையுணர்க.

தெய்வச்சிலையார்

இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், எச்சவியல் என்னும் பெயர்த்து; கிளவியாக்கம் முதலாக உரிச்சொல் வோத்து ஈறாகக் கிடந்த எட்டோத்தினுள்ளும் உணர்த்தாத பொருளை ஈண்டுணர்த்துதலாற் பெற்ற பெயர்.

நச்சினார்க்கினியர்

முற்கூறிய எண்வகை ஓத்தினுள்ளும் உணர்த்துதற்கு இடம் இன்றி எஞ்சி நின்ற சொல் இலக்கணங்களைத் தொகுத்து உணர்த்துதலின், இஃது எச்சவியல் என்னும் பெயர்த்தாயிற்று.

வெள்ளைவாரணனார்

கிளவியாக்கம் முதலாக உரியியல் இறுதியாகவுள்ள இயல்களுள் உணர்த்துதற்கு இடம் இல்லாமையாற் கூறப்படாது எஞ்சிநின்ற சொல்லிலக்கணம் எல்லாவற்றையும் தொகுத்துணர்த்துவது இவ்வியலாதலின் எச்சவியல் என்னும் பெயர்த்தாயிற்று.............

இவ்வியலின்கண் 1 முதல் 15 வரையுள்ள சூத்திரங்கள் செய்யுட்குரிய சொல்லும் அவற்றது இலக்கணமும் அவற்றாற் செய்யுள் செய்யும் வழிப்படும் விகாரமும் செய்யுட் பொருள் கோளும் உணர்த்துவன. 16 முதல் 26 வரையுள்ள சூத்திரங்கள் வேற்றுமைத் தொகை முதலிய அறுவகைத் தொகைச் சொற்களின் இயல்பினை விரித்துரைப்பன. 20 முதல் 30 வரையுள்ளவை சொல்மரபு பற்றிய வழுக்காப்பன. 31 முதல் 33 வரை வரையுள்ளவை முற்றுச் சொற்கு இலக்கணம் கூறுவன. 34 முதல் 45 வரையுள்ளவை முன்னர்க் கூறப்படாது எஞ்சிய பிரி நிலை முதலிய பத்துவகை யெச்சங்களின் முடிபு கூறுவன. 40 முதல் 65 வரையுள்ள சூத்திரங்கள் ஒருசார் மரபு வழுக்காத்தல், மரபிலக்கணம், விகாரம், வினையெச்சத்திரிபு, இரட்டைக்கிளவி, ஆற்றுப்படைச் செய்யுள் முடிபு என முன்னர்க் கூறாதெஞ்சிய சொல்லிலக்கணம் உணர்த்துவன. இறுதியிலுள்ள 66 ஆம் சூத்திரம் இச்சொல்லதிகாரத்துக்குப் புறனடையாகும்.