ஆதி களபம், மாதங்கம், கைம்மா, கடமா, பகடு --- இவை யானையைக் குறிக்கும் வெவ்வேறு சொற்கள் ‘கடி’ வேறு வேறு பொருள் தரும் ஒரு சொல். திரிசொல் இடங்கண்டு நாம் பொருள் கொள்ளுமாறு உள்ள சொல். சுப்பிரமணிய சாஸ்திரியார் சேனாவரையத்திற் கூறப்பட்ட ‘கிள்ளை, மஞ்ஞை என்பன ஒரு சொல் ஒரு பொருட்குரித்தாகிய திரிசொல்லாதலின் இருபாற்றென்றல் நிரம்பாது எனின்’ என்ற ஆசங்கைக்கு மூலம், ஒரு சொல்லே ஒருபொருள் குறித்த வேறு கிளவியாயும் வேறு பொருள் குறித்த ஒரு சொல்லாயும் இருப்பினே அது திரிசொல்லாகும் என்று சூத்திரத்திற்குப் பொருள் என்ற கருத்துப்பற்றி. அவ்வாசங்கைக்கு விடை, திரிசொல் என்பது ஒரு பொருள் குறித்த வேறு கிளவியாகவேனும் வேறு பொருள் குறித்த ஒரு சொல்லாகவேனும் இருக்கும் என்பதே. சிவலிங்கனார் (சேனாவரையம் : “அஃதேல்...... கூறாமையின் என்பது” - விளக்கம்) 1. இச்சூத்திரம் “ திரிசொல்லானது ஒரு பொருள் குறித்த பல சொல்லாகியும் பலபொருள் குறித்த ஒரு சொல்லாகியும் வரும்” என்பது உணர்த்தியது. இதனால் இவ்விருவகையது திரிசொல் எனப்படும். இது அதாவது இவ்விருவகைப்படுவது திரிசொற்கு இலக்கணம் என்றால், உரிச்சொல்லும் ஒரு பொருள் குறித்த பல சொல்லாகியும் பல பொருள் குறித்த ஒரு சொல்லாகியும் வரும் என்று கூறப்படுதலின் உரிச் சொல்லும் திரிசொல் ஆகுமா?- இது வினா. விடை : இச்சூத்திரம் திரிசொல்லாவது யாது என இலக்கணம் கூறவில்லை. திரிசொல் இரண்டுவகைப்படும் என்றே கூறுகிறது. 2. அப்படியானால் திரிசொல் இலக்கணம் எங்குக் கூறப்பட்டது - இதுவினா. |