பக்கம் எண் :

200தொல்காப்பியம்-உரைவளம்

என்பது பன்மை வினை கொண்டு முடிந்தாற்போல உயர்திணை ஒட்டுப்பெயர் பன்மை வினை கொண்டு முடியும் எனச்சொல் முடிவு நோக்கிக் கூறினார் என்க.

நச்.

இஃது உம்மைத் தொகைக்கு வழு அமைக்கின்றது.

இ-ள் : உயர்திணை மருங்கின் உம்மைத் தொகை-உயர்திணைப் பெயரிடத்துத் தொக்க உம்மைத் தொகையின் ஈறு, பலர் சொல் நடைத்து என மொழிமனார் புலவர் - பலரைச் சொல்லும் சொல்லின் இறுதி போலப் பன்மை யுணர்த்தி நிற்கும் என்று கூறுவர் ஆசிரியர், எ-று.

உ-ம் : கபிலபரணர்.

‘கபிலன் பரணன்’ என்பதில் ‘கபிலன் என்னும் னகர வீறு சந்தியால் கெட்டுக் ‘கபில பரணர்’ என நின்றவழி இருவராய் நின்றமையின், ‘வந்தார்’ என்னும் பன்மையோடு முடிதல் வேண்டுதலின், ஆண்டு நின்ற ஒருமையீறு பன்மையொடு முடிதல் வழு என்று கருதி, னகர வீறு ரகர வீறாய் நிற்கும் என வழுவ மைத்தார். ‘கல்லாட மாமூல சீத்தலைச் சாத்தர்’ என்றாற் போல்வனவும் அது. 1இவை ஓசை பகுத்து இசைத்தலின் ஒரு சொல்லாய் ஒட்டாமை காண்க.

2உயர்திணைப் பெயர் என்னாது ‘மருங்கின்’ என்றார், உயர்திணை விரவுப் பெயரும் அடங்குதற்கு.


1. கல்லாடன் மாமூலன் சீத்தலைச் சாத்தன் எனின் ஓசை பகுத்து இசைக்கும்; அவை ஒரு சொல்லாய் ஒட்டா. கல்லாட மாமூல சீத்தலைச் சாத்தர் எனின் அவை ஒட்டி ஒருசொல் நீர்மையாம்.

2. அஃறிணை விரவுப் பெயர், உயர்திணை விரவுப்பெயர் என விரவுப் பெயர் இருவகை என்பது நச். கருத்து.