பக்கம் எண் :

208தொல்காப்பியம்-உரைவளம்

தெய்

இசைநிறையடுக்கி நிற்கும் வரையறை உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் : இசைப்பொருட்கண் அடுக்கிவரும் சொல்லிற்கு எல்லை நான்கு, எ-று.

உ-ம் : 1ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும்
 விளக்கினிற் றீயெரி யொக்குமே யொக்கும்
குளக் கொட்டிப் பூவின் நிறம்

இதனுள் ஒக்கும் என்னும் சொல் இசைநிறைக்கண் நான்கு வரம்பாகி வந்த வாறு கண்டு கொள்க.

நச்

இது முற்கூறிய இசைநிறை அடுக்கிற்கு வரையறை கூறுகின்றது.

இ-ள் : இசைப்படு பொருளே நான்கு வரம்பு ஆகும் - முற்கூறிய ஒருசொல் அடுக்கினுள் இசை நிறைத்தலால்படும். பொருண்மைக்கு வரும் அடுக்கு நான்காகிய எல்லை உடைத்தாம், எ-று.

உ-ம் : பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ எனவரும்.

ஆதி

செய்யுளில் இசைநிறையாக ஒருசொல் நான்கு முறையே வரலாம் அஃதே உச்சவரம்பு.

வம்மினே வம்மினே வம்மினே வம்மினே வந்தென் உரையைக் கேண்மினே கேண்மினே - நான்குமுறையும் இரண்டு முறையும் வந்துள்ளன.


1. பொருள் : குளக் கொட்டிப்பூவினது நிறம் விளக்கில் எரியும் தீயின் நிறத்தையொக்கும்.