திரியாமையும் திரிந்தமையும் கருதியன்று. வானரத்தின் முகம் தன் இயல்பாய் இருந்ததேனும் நரர் முகச்செல்விக்கு மறுதலைப்பட்டமை கருதி ‘வலிமுகம்’ எனப்பட்டது போலக்கல்வி யேதுவானன்றி இயல்பாகத் தம் பொருளையுணர நிற்றலின் இயற்சொல் என்றும், அவ்வியல்பிற்கு மறுதலைப்பட்டுக் கல்வியேதுவால் தம்பொருளையுணர நிற்றலின் திரிசொல் என்றும் கூறப்பட்டது என்க” (நன். பெயரியல் 15-உரை) கா. மீனாட்சி சுந்தரம். கற்ற அறிஞர்களால் ஆக்கிக்கொள்ளப்பட்ட சொற்களே திரிசொற்கள் என்ற கருத்து உரையாசிரியர்கள் சிலரிடம் இருந்திருக்க வேண்டும் என்பது சேனாவரையர் உரையிலிருந்து தெரிகிறது. முழுவதும் திரிந்த வற்றைக் கட்டிய வழக்கு என்பாரும் உளர் எனச் சேனாவரையர் குறிக்கின்றார் கட்டிய வழக்கு என்பது ஆக்கிக் கொள்ளப்பட்ட வழக்கு என்ற பொருளைத்தரும். ஆதலால் இந்நூற்பாவிற்கு அறிஞர்கள் அமைத்துக்கொண்ட சிறப்புச் சொற்களே திரிசொல் ஆகும் எனக்கூறும் உரையாசிரியர்களும் இக்கருத்தினர் என்பதும் தெளிவு. எனவே சிறப்பு மொழி என்பதும் திரிசொல் என்பதும் ஒருங்கு வைத்து எண்ணத் தகுந்தவை என்பது என்கருத்தாகும். பொது மொழியிலிருந்து சிறப்பு மொழி பிறக்கலாம். கற்றுத்துறை போகியவர்கள் ஒரே சொல்லைப் பொதுப் பொருளிலிருந்து பிரித்துச் சிறப்புப் பொருள்களில் பயன்படுத்தலாம். அப்போது ஒருசொல் பல பொருளைக் கொண்ட தாகின்றது ஒரே சொல்லை ஆகுபெயராகவும் உருவகமாகவும் வழங்கினால் பொருள் வேறுபடுகின்ற தன்றோ ? மேலும் பொது மொழிச் சொற்களை ஒருவரையறுத்த பொருளில் கலைச்சொற்களாக அறிஞர்கள் அமைத்துக் கொள்கின்றனர். ஒரே பொருளைக் குறிக்கப் பல சொற்களை ஆக்கிக்கொள்வதும் உண்டு இவ்வாறு அமைகின்ற சொற்களைச் சிறப்பு மொழிச் சொற்கள் என்று மொழி நூலார் விரித்துக்காட்டுகின்றனர். (சொற்பகுப்பு- அன்றும் இன்றும்- ஆய்வுக்கோவை-5 1973). |