செ. வை. சண்முகம் பெயர் என்பது உலக வழக்கில் ஆள் பெயரையும் இலக்கணத்தில் பெயர்ச் சொல்லையும் குறிக்கும். முன்னது இயற்சொல்; பின்னது திரிசொல். இயற்சொல்லாய் ஒரு பொருள் குறித்த ஒரு சொல்லாய் இருந்தது, திரிசொல்லாகிப் பல பொருள் குறித்த ஒரு சொல்லாக மாறிவிட்டது. அப்படியே முல்லையென்பது செடி, பூ என்ற தொடர்புடைய பொருளை (ஆகு பெயராக) இயற்சொல்லைக் குறித்தது. அகப்பொருளில் இருத்தல் என்ற பொருளைக் குறிக்கப் பயன்படுத்தியதும் திரிசொல்லாகிவிட்டது. குறிஞ்சி நெய்தல் பாலை போன்ற பூப்பெயர்களும் ஐந்திணைப் பெயர்களாகப் பயன்படும்போது திரிசொல்லாகவும் பல பொருள் ஒரு சொல்லாகவும் ஆகிவிட்டன. திரிசொல்லாக மாறியதும் அந்தச் சொல்லுக்கு இன்னொரு புதிய பொருள் சேர்ந்து விடுகிறது. நெருநல் (நேற்று) என்று இயற்சொல் குறிக்கும் பொருளை இலக்கணத்தில் இறந்த காலம் என்று கூறுகின்றார்கள். இது ஒரு பொருள் குறித்த பல சொல்லாகும். இன்று என்பது நிகழ்காலம் என்பதும், நாளை என்பது எதிர்காலம் என்பதும் இந்த வகையைச் சார்ந்தனவே. கணவனுடன் சேர்ந்து வாழும் வாழ்க்கை இல்வாழ்க்கை அல்லது இல்லறம் என்று குறிப்பிடுவதே அகப் பொருளில் கற்பு எனப்படுகிறது. எனவே இல்வாழ்க்கை, கற்பு என்ற இரண்டும் ஒரு பொருள் குறித்த பல சொல் ஆகும். அடுத்துத் திரிசொல் என்பது செய்யுள் ஈட்டச் சொல்லாக உரை நடையில் மட்டும் அல்லாமல் கவிதையிலும் கூடப் பயன்படுத்தப் படுகிறது. உயர்திணை என்ற இலக்கணத் திரிசொல் ‘ஊமையான மனிதன்’ என்ற கருத்தைக் குறிக்க உயர்திணை யூமன்’ என்று குறுந்தொகையில் (224) வழங்கியிருப்பதும் சுட்டிக் காட்டத் தகுந்தது. எனவே செய்யுள் என்ற பொதுப் பொருளுக்கு ஏற்ப திரிசொல் செய்யுள் இலக்கியத்தில் சிறுபான்மையும் உரை நடையில் சிறப்பாக இலக்கியம் தவிரப் பிற துறைகளில் பெரும்பான்மையும் வழங்குகிறது. ஒருவனுக்கும் ஒருத்திக்கும் உருவென் றாலவ் வுருவையிஃ தொருத்தன் என்கோ ஒருத்தி யென்கோ |