பக்கம் எண் :

220தொல்காப்பியம்-உரைவளம்

இவையும் கட்டுரைக்கண் அடுக்கியும் சிறுபான்மை அடுக்காதும் ஏற்றவழி அசைநிலையாய் வருமாறு கண்டு கொள்க.

நின்றை காத்தை என்பன இக்காலத்துப் பயின்ற வாரா. 2வினாவிற்கடையாக அடுக்கி வந்தவழி முன்னிலை யசைநிலையேயாம். இவை அடுக்கியம் அடுக்காதும் முன்னிலைச் சொல்லாதலும் உடைமையான், அந்நிலைமை நீக்குதற்கு ‘முன்னிலையல் வழி’ என்றார்.

முன்னுறக் கிளந்த இயல்பாகும் என்றதனான், முன்னையை போலச் சிறுபான்மை வினாவொடு வருதலுங் கொள்க.

முன்னிலை யல்வழி யென்பதற்கு முன்னைபோல வினாவொடு சிவணி நில்லாதவழி யென்றுரைத்தாரால் உரையாசிரியர் எனின், அற்றன்று; வினாவொடுசிவணல் இவற்றிற் 3கொன்றான் எய்தாமையின் விலக்கவேண்டா; அதனான் அவர்க்கது கருத்தன் றென்க.

இரண்டு சூத்திரத்தாலும் கூறப்பட்டன வினைச் சொலலாதலும் இடைச்சொல்லாதலும் உடைமையான் வினையியலுள்ளும் இடையியலுள்ளும் கூறாது ஈண்டுக் கூறினார்.

அஃதேல் ஆக, ஆகல், என்பது (சொல். 280) என்பனவற்றோடு இவற்றிடை வேற்றுமை யென்னை அவையும் வினைச்சொல்லாதலுடைமையான் எனின், இசை நிறைத்தற்கும் பொருள் வேறுபாட்டிற்கும் அடுக்கி வரின் அல்லாது அடுக்காது வருதலே வினைச் சொற்கியல்பாம். ஆக, ஆதல், என்பது என்பன அடுக்கியல்லது நில்லாமையின், வினைச்சொல் இடைச்சொல்லாயின எனப்படா; கண்டீர் கொண்டீர் என்பன முதலாயின வினைச் சொற்குரிய ஈற்றவாய் அடுக்கியும் அடுக்காதும் வருதலால் வினைச்சொல் அசைநிலையாயின எனப்படும்; இது தம்முள் வேற்றுமை யென்க. அல்லதூஉம் வினாவொடு சிவணி நிற்றலானும் வினைச்சொல் எனவேபடும் என்பது.


2. கேட்டையோ என்பதில் இறுதி ஓ வினா; கேட்டை என்பது அதற்கு அடை யென்பது கருத்து.

3. ஒன்றான் - ஒன்றானும் அதாவது ஓரிடத்தும். வினாவொடு இவை சிவணும் என்பது எங்கும் முன்னர்ச் சொல்லப்படாமையின் விலக்குதல் வேண்டுவதில்லை.