பக்கம் எண் :

242தொல்காப்பியம்-உரைவளம்

‘வினையெனப்படுவது’ (வினை-1), ‘எஞ்சிய கிளவி’ (வினை. 26) என்ற சூத்திரங்களால் கூறப்பட்ட எல்லா வினைகளுக்கும் உரிமை ‘இறப்பின் நிகழ்வின்’ (வினை. 31) என்ற சூத்திரத்தால் விலக்கப்பட்டது என்று உரையாசிரியர் கூறுகின்றார். அச்சூத்திரம் (31) முற்றுச்சொல் என்ற குறியிடுவதற்கு வந்தது என்று அவரே கூறுதலின், அது பொருந்தாது.

சேனாவரையத்தில், “இனி ஓருரை - மேலைச் சூத்திரத்தால் *............................... முற்றுச் சொல்லே என்பதாம்” என்றுளது. இதனை, நச்சினார்க்கினியர், “அம்முதல் நிலை *................................................. சூத்திரத்துட் கூறினாம்” என்று மறுத்தார். ஈண்டு, ‘எச்சமாதல் ஒருதலையன்று’ என்பது பெறப்படும் என்று கூறுவதால் பெரும் பயன் இன்மையானும், வியங்கோள் முதலியன முற்றுச் சொல்லா அல்லவா என்ற ஐயத்தை நீக்க வேண்டுவது அவசியமாதலானும் இவ்வுரை சேனாவரையரால் எழுதப்பட்டதன்று; ஆயினும், இவ்வுரையை நச்சினார்க்கினியர் மறுத்தலான் அவர் காலத்துக்கு முன்பெ ஏட்டிற் படிப்போரால் சேர்க்கப்பட்டிருத்தல் வேண்டும் என்பது என் கருத்து.

“இருவகை எச்சத்திற்கும் ‘காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம்’ என்ற பொது விதியான் முக்காலமும் ஒன்றற்கு வருமோ என்னும் ஐயம் நிகழ்ந்ததனை இச்சூத்திரத்தான் அகற்றினார்” என்ற நச்சினார்க்கினியர் கொள்கையும் பொருத்தமாகத் தோன்றவில்லை.

வினைமுற்று பெயர் கொண்டு
முடிதல்

423 அவைதாந்
  தத்தங் கிளவி யடுக்குந வரினு
மெத்திறத் தானும் பெயர்முடி பினவே.       (33)
  
 (அவைதாம்
தம் தம் கிளவி அடுக்குந வரினும்
எத் திறத்தானும் பெயர்முடி பினவே.)

* புள்ளியிட்ட இடங்களை சேனாவரையர் நச்சினார்க்கினியர் உரையிற் கண்டு கொள்க.