பக்கம் எண் :

248தொல்காப்பியம்-உரைவளம்

வெள்

இது முற்றுச் சொற்கு முடிபு கூறுகின்றது.

இ-ள் : மேற்குறித்த முற்றுச் சொற்கள்தாம் தத்தம் பாற்சொல்லாகிய முற்றுச் சொற்களாய்ப் பல அடுக்கி வரினும் (தம்முள் முடியாது) எவ்வாற்றானும் பெயரொடு முடியும், எ-று.

உ-ம் : ‘உண்டான் தின்றான் ஓடினான் பாடினான் சாத்தன்’ எனவும், ‘நல்லன் அறிவுடையன் செவ்வியன் சான்றோர் மகன்’ எனவும் வினையும் வினைக் குறிப்புமாகிய முற்றுச் சொற்கள் பல அடுக்கி வந்து பெயரொடு முடிந்தன.

‘என்மனார் புலவர்’ என வெளிப்பட்டும், ‘முப்பஃதென்ப’ என வெளிப்படாதும் பெயரொடு பெயர் முடிபாம் என்பர் ‘எத்திறத்தானும் பெயர் முடிபினவே’ என்றார். இன்னும் ‘எத்திறத்தானும்’ என்றதனான் உண்டான் சாத்தன், சாத்தன் உண்டான் என முன்னும் பின்னும் பெயர் கிடத்தலும் கொள்ளப்படும்.

ஆதி

அவ்வினை முற்றுகள் பல பல அடுக்கி வரினும் எவ்வகையிலும் ஒரு பெயரில் முடிவனவாம்.

வந்தான் இருந்தான் படித்தான் படுத்தான் உறங்கினான் கண்ணன்; அறிவன் அழகன் நல்லோன் முருகன்.

1எழுவாய் முதலில் வரினும் வினைத் தொடர்கள் அதனொடு முடிவன ஆகும்.


1. கண்ணன் வந்தான் இருந்தான்.....உறங்கினான் என எழுவாய் முதலில் வரினும், வந்தான் இருந்தான்....உறங்கினான் என்னும் தொடர் கண்ணன் என்பதனோடு முடிவதாக ஆகும்.