பக்கம் எண் :

250தொல்காப்பியம்-உரைவளம்

முத்து. ஒ. 107, 108.

பிரிநிலை வினையே பெயரே ஒழியிசை
எதிர்மறை உம்மை எனவே சொல்லே
குறிப்பே இசையே ஆயீ ரைந்தும்
நெறிப்படத் தோன்றும் எச்சச் சொல்லே,
தத்தம் எச்சத்தொடு சார்ந்துநின் றியலும்.

இளம்

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், மேல் வினையியலுள்ளும் இடைச் சொல்லுள்ளும் முடிபு கூறப்படாது நின்ற எச்சங்கட்கு முடிவு உணர்த்தலான் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று.

உரை : 1எல்லாவற்றையும் எச்சம் என்பதனைக் குறைத்துப் பின்னை ‘எஞ்சு பொருட் கிளவி’ என்றார், இறுதி விளக்காகப் பிரிநிலையெச்சம் முதலாகக் கூறப்பட்ட பத்துவகை யெச்சங்களும் முன்பு முடிபு கூறப்படாது நின்றன வேனும் இனி நெறிப்படத் தோன்றும் அவை, எ-று.

சேனா

முற்றுச்சொல் உணர்த்தி எச்சம் ஆமாறு உணர்த்துகின்றார். எஞ்சு பொருட்கிளவி கொண்டல்லது அமையாமையின் எச்சமாயினவும், ஒரு தொடர்க்கொழிபாய் எச்சமாயினவும் என அவை இருவகைப்படும்.

இ-ள் : பிரிநிலை முதலாகச் சொல்லப்பட்ட பத்தும் எஞ்சு பொருட் கிளவியாம், எ-று.


1. பிரிநிலையெச்சம் வினையெச்சம் என எல்லாவற்றையும் எச்சம் என்று கூறுவதைக் குறைத்து இறுதியில் யாவற்றையுந் தனித்தனிக் கூட்டும்படி எஞ்சுபொருட்கிளவி என்றார். எஞ்சு பொருட் கிளவி என்பதைக் கடைநிலைத் தீவகமாகக் கொண்டு பிரிநிலை எஞ்சம் முதலியவாகக் கூறிக்கொள்க. இறுதி விளக்கு-கடை நிலைத் தீவகம்.