இ-ள் : நெறிப்படத் தோன்றும் எஞ்சு பொருள் உணர்த்துங் கிளவி பிரிநிலை முதலாக இசையீறாக ஓதப்பட்ட பத்தும், எ-று. எஞ்சுபொருட் கிளவியாவது சொல்லாது ஒழிந்த பொருளை இனிது விளக்குஞ்சொல். நெறிப்படத் தோன்றுதலாவது வாக்கியமாகிய தொடர்மொழிக்கண் முன்னும் பின்னும் நின்ற சொல்லை நெறிப்படுத்தற்கு ஆண்டுத் தோன்றுதல். அது புலப்பட நில்லாமையின் எச்சம் ஆயிற்று. பிரிநிலையெச்சமாவது பலபொருளில் ஒன்று பிரிந்தவழிப் பிரிக்கப்பட்ட பொருண்மையும் தோன்ற நிற்பது. வினையெச்சமாவது ஒரு வினைச்சொல் எஞ்சி நிற்பது, பெயரெச்சமாவது ஒரு பெயர்ச் சொல் எஞ்சி நிற்பது. அஃதேல், வினையெச்சம் பெயரெச்சம் என்பன வினையியலுள் ஓதப்பட்டனவல்லவோ வெனின், ஆண்டு ஓதப்பட்டன பெயரையும் வினையையும் ஒட்டி நின்று இயலும்; ஈண்டையன அன்னவல்லவாமாறு உதாரணத்தான் விளங்கும். ஒழியிசை யெச்சமாவது சொல்லப்பட்ட பொருளையொழியச் சொல்லாது ஒழிந்து நின்ற பொருளுந்தோன்ற நிற்பது. எதிர்மறை யெச்சமாவது ஒரு பொருளைக் கூறியவழி, அதனின் மாறுபட்ட பொருண்மையும் அதனானே உணர நிற்பது. உம்மை யெச்சமாவது உம்மை கொடுக்க வேண்டும் வழி அஃது எஞ்சி நிற்றல். என என் எச்சமாவது என என்று சொல்ல வேண்டும் வழி, அச்சொல் எஞ்சி நிற்பது. சொல்லெச்சமாவது ஒரு சொல்லினான் ஒரு பொருளை விதந்தோதியவழி அவ்விதப்பினானே பிறிதும் ஒருபொருளைக் கொள்ளுமாறு நிற்பது. |