பக்கம் எண் :

254தொல்காப்பியம்-உரைவளம்

எச்சம் சொல்லெச்சம் குறிப்பெச்சம் இசையெச்சம் என்னும் இப்பத்தும் முறைமைப்படத் தோன்றும் எச்சங்களாம், எ-று.

எஞ்சு பொருட்கிளவி - எஞ்சி நிற்பதோர் பொருளையுடைய எச்சச்சொல். பெயர் வினை என்பன ஈண்டு அவற்றால் முடியும் பெயரெச்சத்தினையும் வினையெச்சத்தினையும் சுட்டி நின்றன; ஆகுபெயர். ஆயீரைந்தும் எஞ்சுபொருட்கிளவி என்றாரேனும் எஞ்சு பொருட்கிளவி ஈரைந்து என்பது கருத்தாகக் கொள்க.

பிரிக்கப்பட்ட பொருளையுணர்த்துஞ்சொல் எஞ்ச நிற்பது பிரிநிலையெச்சம். வினைச்சொல் எஞ்ச நிற்பது வினையெச்சம். பெயர்ச்சொல் எஞ்ச நிற்பது பெயரெச்சம். சொல்லொழிந்த சொற்பொருண்மை எஞ்ச நிற்பது ஒழியிசையெச்சம். தன்னின் மாறுப்பட்ட பொருண்மை எஞ்ச நிற்பது எதிர்மறையெச்சம். உம்மையுடைத்தாயும் உம்மையின்றியும் வரும் சொற்றொடர்ப்பொருளை எச்சமாகக் கொண்டு முடிய நிற்பது உம்மையெச்சமாகும். என என்னும் ஈற்றை யுடையதாய் வினையெஞ்ச நிற்பது எனவென் எச்சமாகும். இவை ஏழும் தமக்கு மேல் வந்து முடிக்கும் எச்சச் சொற்களையுடைய எச்சங்களாகும். சொல்லெச்சம் குறிப்பெச்சம் இசையெச்சம் என்னும் மூன்றும் ஒரு தொடர்க்கு ஒழிபாய் எஞ்சி நிற்பன. எனவே இவை பிற சொற்களை விரும்பி நில்லாது சொல்லுவார் குறிப்பால், சொல்லப்படாது எஞ்சி நின்ற பொருளை யுணர்த்துவனவாகும். ஒரு சொல்லளவு எஞ்சி நிற்பன சொல்லெச்சம் என்றும், தொடராய் எஞ்சுவன இசையெச்சம் என்றும், இங்ஙனம் சொல்வகையானன்றிச் சொல்லுவான் குறிப்பினான் வேறு பொருள் எஞ்ச நிற்பன குறிப்பெச்சம் என்றும் கூறுவர்.

எச்சமாவன ஒருசார் பெயரும் வினையும் இடைச் சொல்லுமாதலின் பெயரியல் முதலிய இயல்களுள் இப்பத்தெச்சங்களையும் ஒருங்குணர்த்துதற்கு இடம் இன்மையால் எஞ்சி நின்ற இலக்கணங் கூறும் இவ்வெச்சவியலின் கண்ணே இவற்றைத் தொகுத்துக் கூறினார் ஆசிரியர்.