பக்கம் எண் :

258தொல்காப்பியம்-உரைவளம்

‘சோற்றைப் பசித்து உண்டான்’ என்றாற் போல அவன் என்னும் சுட்டுப்பெயரும் இடைநின்ற ஏகார ஓகாரமும் கொண்டான் என்பதனோடு முடிந்தன. அன்றி அவன் என்பது கொண்டான் என்பதனோடு முடிய, ஏகார ஓகாரங்கள் ‘பிறர் கொண்டிலர்’ என்பதனோடு முடிந்தன என்றல் பொருத்தமுடைத்து எனின், வினையெச்சமும் பெயரெச்சமும் ஒழித்து இடைச்சொல்லான் வரும் எச்சங்கள் பொருள் தருமாறு இடைச்சொல்லோத்தினுள்கூறி, ஈண்டு அவற்றிற்கு முடிபுச்சொல் கூறுகின்றார் ஆதலின், கொண்டான் என்னும் சொல் வந்து அவ்வெச்சங்களை முடித்தால் அல்லது ‘பிறர் கொண்டிலர்’ என்னும் பொருண்மை முடிபு தோன்றாது ஆதலின் ‘கொண்டான்’ என்பதே முடிக்குஞ் சொல்லாய் நிற்பப் பிறர் கொண்டிலர் என்னும் பொருண்மை முடிபு தோன்றிற்று என்றலே பொருத்தம் உடைத்து என்று கோடும் அன்றியும் 1மும்மையெச்சத்திற்கு உள் நின்ற பொருண்மை முடிபு முன்னர்க்கூறி, அதனை நீக்கிச் சொன்மை முடிபு ஈண்டுக் கூறுகின்றதனானும் இஃதே ஆசிரியர் கருத்து என்று உணர்க.

வெள்

இது பிரிநிலையெச்சத்திற்கு முடிபு கூறுகின்றது.

இ-ள் : ஏகாரப் பிரிநிலை ஓகாரப் பிரிநிலையாகிய இவ்விருவகைப் பிரிநிலையெச்சமும் பிரிக்கப்பட்ட பொருளையுணர்த்தும் சொல்லொடு முடியும், எ-று.

உ-ம் : தானே கொண்டான், தானோ கொண்டான் என்னும் பிரிநிலையெச்சம் ‘பிறர் கொண்டிலர்’ எனப்பிரிக்கப்பட்ட பொருளை யுணர்த்தும் சொல்லால் முடிந்தது.

தான் எனப்பட்டான் பிறரிற் பிரிக்கப்பட்டவழிப் பிறரும், அவனிற் பிரிக்கப்பட்டமையாற் ‘பிறர் கொண்டிலர்’ என்பது பிரிநிலைப் பொருளாயிற்று.


1. மும்மையெச்சம் - பெயரெச்சம், வினையெச்சம், இடைச்சொல் எச்சம். உம், ஏ, ஓ, முதலியன இடைச்சொல்லாதலின் அவ்வெச்சங்கள் இடைச்சொல் எச்சங்களாம். உள் நின்ற பொருண்மை முடிபு வினையியலிலும் இடையியலிலும் கூறப்பட்டன.