இனி ‘வருகதில் கொண்கன்’ என, ‘வருக’ எனப்பட்டானும் அவனே ‘கொண்கன் எனப்பட்டானும் அவனே; அதனால் அதுவும் அப்பொருள் கொண்டு முடிந்தது. இனிக் ‘கொளலோ கொண்டான்’ என்புழிக் கொளலோ எனப்பட்டானையே கொண்டான் என்பது. அதனால் அதுவும் அவ்வொழியிசைப் பொருள் கொண்டு முடிந்தது. சேனா இ-ள் : மன்னை யொழியிசையும் தில்லை யொழியிசையும் ஓகார ஒழியிசையும் ஆகிய ஒழியிசையெச்சம் மூன்றும் ஒழியிசையான் முடியும், எ-று. உ-ம் : கூரியதோர் வாள்மன், வருகதில் லம்ம வெஞ்சேரி சேர” (அகம். 276), கொளலோ கொண்டான் என்னும் ஒழி யிசையெச்சம் முறையானே திட்பம் இன்று, வந்தால் இன்னது செய்வல், கொண்டுய்யப் போமாறறிந்திலன் என்னும் ஒழியிசையான் முடிந்தவாறு. பிறவும் முடிதற்கேற்கும் ஒழியிசையறிந்து கொள்க. தெய் ஒழியிசை யெச்சத்திற்கு முடிபு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : ஒழிந்த சொல்லை எச்சமாக வுடையது அவ்வொழிந்த சொல்லினாற் பொருள் முடிபு பெறும், எ-று. உ-ம் : இவர் கல்வியாற் குறைவிலர் என்றவழி, ஒழுக்கத்தாற்குறையுடையர் என்றாதல், பொருளாற்குறையுடையர் என்றதால் ஒரு பொருளாற் குறித்தவழி பொருள் பட்டவாறும், அதனானே, அச்சொல் முற்றுப் பெற்றவாறும் கண்டு கொள்க. நச் இஃது ஒழியிசையெச்சத்திற்கு முடிபு கூறுகின்றது. இ-ள் : ஒழியிசை எச்சம் ஒழியிசை முடிபின-மன்னும் தில்லும் ஓகாரமுமாகிய ஒழியிசை யெச்சம் மூன்றும் அவ்வொழியிசைப் பொருள்மேல் வரும் சொல்லையே தமக்கு முடிபாகவுடைய, எ-று. |