பக்கம் எண் :

எதிர்மறையெச்ச முடிபு சூ. 39275

உரை : 1எதிர்மறை யெச்சம் என்பன இரண்டு. ஓகார எதிர்மறையும் உம்மை எதிர்மறையும் என. அவை, அவை தம் எதிர்மறைப் பொருள் கொண்டு முடியும், எ-று.

வ-று : யானோ கொண்டேன் என்பது. 2யானோவன்றே கொண்டேன் என்றாலும் அதனால் அப்பொருள் கொண்டு முடிந்தது எனப்படும் 3‘நீயே கொண்டாய்’ என்றாற்கு எதிர் மறுத்தவாறு ‘யான் கொண்டிலன்’ என என்பது.

இனி 4உம்மை எதிர்மறை : ‘வரலும் உரியன்’ என்பது. ஆண்டு ‘வரலும்’ எனப்பட்ட உம்மை எதிர்மறை. உரியன் எனப்பின்னும் அவனேயே கொண்டு முடிந்தது. 5வாராமையும் உரியன் என்பதற்கு எதிர்மறை. அவை ஒன்றொன்றனை நோக்க எதிர்மறை யென்றவாறாயிற்று.


1. “எதிர்மறையெச்சம் என்பன மூன்று. ஓகார் எதிர் மறையும் ஏகார எதிர்மறையும் உம்மையெதிர்மறையும் என” என்று இருத்தல் வேண்டும். உதாரணம் ஏகாரத்துக்கும் காட்டப்பட்டுள்ளது.

2. “யானோவன்றே............................ எனப்படும்” - இத்தொடர் பொருந்தாது. யானோ அன்றே என்பது யானே என்னும் பொருளது. ‘அன்றே யானோ கொண்டேன்’ என்பதாகக் கொண்டால், அன்றே யான் கொண்டிலேன்’ என எதிர்மறைப் பொருளதாகலாம்.

3. இவ்வுதாரணமும் பொருந்தாது. ஏகாரம் தேற்றமாகவோ பிரிநிலையாகவோ வருகிறது. ‘நீயே கொண்டாய்’ என்பது ‘நீகொண்டிலை’ என்னும் பொருள் தருவதாயின் ஏகாரம் எதிர்மறையாம்.

4. ஏகார எதிர் மறைக்கும் உதாரணம் காட்டுவதால் எதிர்மறை எச்சம் என்பன மூன்று; ஓகார எதிர்மறையும் ஏகார எதிர் மறையும் உம்மை யெதிர் மறையும் என” என்றிருப்பின் நன்று. (கழகப்பதிப்பு அடிக்குறிப்பு)

5. வாராமையும் உரியன் என்பதற்கு எதிர்மறை வரலும் உரியன் என்பது. வாராமையை நோக்க வரலும் என்பதும், வரலும் என்பதை நோக்க வாராமை யென்பதும் எதிர்மறைகள்.