பக்கம் எண் :

280தொல்காப்பியம்-உரைவளம்

2உம்மை யெச்சம் இருவீற்றானும் என்றதனான், உம்மை யெச்சத்திற்கு முடிபாகிய எஞ்சு பொருட் கிளவி உம்மையொடு வரின் எச்சமாம் என்பதாம். அஃது எச்சமாங்கால், முன்னின்றது எஞ்சு பொருட் கிளவியாம் என்பது.

எதிர்மறையும்மை எதிர்மறை யெச்சமாய் அடங்குதலின் ஈண்டு உம்மை யெச்சம் என்றது எச்சவும்மையேயாம்.

தெய்

உம்மையெச்சம் முடியுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் : உம்மையாகிய எச்சம் இரண்டு வேறுபாட்டின் கண்ணும் தன்வினையொடு பொருந்திய முடிபாகும், எ-று.

இருவீறாவன : முன்னின்ற சொல்லும் பின்னின்ற சொல்லும் தன்வினையாவன : இரண்டு சொல்லின் கண்ணும் உடன்பாடாகியும் மறையாகியும் வரும் தொழிலும் காலமும் ஒத்த வினைச்சொல். அது உம்மைக்கேற்ற வினையாதலின் தன் வினையென்றார். ஒன்றிய முடிபாவது அவ்வினையொடு பொருந்திய முடிபாகும் என்றவாறு. ஏனை யெச்சம் போலத்தான் வந்து முடிதலே யன்றித் தான் வந்தாலும் சார்ந்த வினையோடு கூடியல்லது பொருட்கு முடிபாகாது என்றவாறு.

உ-ம் : சாத்தனும் வந்தான், கொற்றனும் வந்தான் எனற்பாலன-சாத்தன் வந்தான், கொற்றன் வந்தான் எனவரின், 3ஆண்டு உம்மை யெஞ்சி நின்ற தென்க.

இருவீற்றானும் என்ற உம்மையான் தனிவரினும் என்று கொள்க. “வதுவை வந்த வன்பறழ்க்குமரி யிருதோள் தோழர் பற்ற” என்றவழி இருந்தோளும் என்னும் உம்மை எஞ்சி நின்றது.


2. ‘சாத்தனும் வந்தான் கொற்றனும் வந்தான்’ என்பதில், ‘சாத்தனும்’ என்பதற்குக் ‘கொற்றனும் வந்தான்’ என்பதும், ‘கொற்றனும்’ என்பதற்குச் ‘சாத்தனும் வந்தான்’ என்பதும் எஞ்சு பொருட்கிளவிகளாம்.

3. உம்மை எச்சமாவது உம்மையே மறைந்து நிற்பது என்பது தெய்வச்சிலையார் கொள்கை.