பக்கம் எண் :

உம்மை யெச்ச முடிபு சூ. 40281

இடைச் சொல்லோத்தினுள் ‘உம்மை யெண்ணின் உருபு தொகல் வரையார்’ (இடை. 42) எனவும், இவ்வோத்தினுள் ‘உம்மைத் தொகை’ (எச்ச. 21) எனவும், ஈண்டு உம்மை யெச்சம் எனவும் கூறினாராதலின், அவற்றின் வேறுபாடு புலப்பட்டின்றால் எனின், பல பொருளை யெண்ணி ஒரு வினையான் முடிக்கும் வழிச் சொற்றோறும் உம்மை கொடுத்து, இடைநின்ற ஒன்றானும் இரண்டானும் சொல்லின்கண் உம்மை கொடாதவழி, உம்மை யெண்ணாகுமோ ஆகாதோவென நின்ற ஐயம் கொளற்குரித்து; ஆண்டு, ‘உம்மை யெண்ணின் உருபு தொகல் வரை யார்’ என்று ஓதுதலின் உம்மை ஆண்டுத் தொக்கது என்க. இரண்டானும் பலவானும் பெயரை யடுக்கி, ஒருசொற் போல ஒருவினையான் முடிக்கும் வழி உம்மைத் தொகை என்க. தனித்தனி வினை கொண்டு உம்மை பிரிந்து நின்றே பொருள்படும் சொற்கள் செய்யுளகத்து எஞ்சி நின்றதனை எஞ்சிற்று என்க.

அஃதற்றாக, காலமும் வினையும் ஒத்தல் வேண்டும் என்றது என்னை? சாத்தன் வந்தான், கொற்றன் வரும் எனவும்; சாத்தன் வந்தான், கொற்றன் போம் எனவும் காலமும் வினை ஒவ்வாமையும் வருமால் எனின், அவை உம்மை யெஞ்சிய சொல்லன்மை வருகின்ற சூத்திரத்தான் விளங்கும்.

நச்

இ்ஃது உம்மை யெச்சத்திற்கு முடிபு கூறுகின்றது.

இ-ள் : இருவீற்றானும் - ஒன்றற் கொன்று முடிவனவும் முடிப்பனவுமாகிய இரண்டு கூற்றின் கண்ணும் வரும், உம்மை எச்சம் தன்வினை-உம்மை யெச்சங்களை முடிக்கும்-தன்னுடைய வினைச் சொற்கள், ஒன்றிய முடிபாகும்-ஓர் உம்மைக்குப் பொருந்திய வினையே மற்றை உம்மைக்கும் முடிபாய்வரும், எ-று.

1உம் : ‘சாத்தனும் வந்தான் கொற்றனும் வந்தான்’ என எதிரது தழீஇய உம்மைக்கு முடிபாய வினையே இறந்தது தழீஇயதற்கும் முடிபு ஆயிற்று.


1. சாத்தனும் என்பதன் உம்மை பின்வரும் கொற்றனைத் தழுவுதலின் எதிரது தழுவியது. கொற்றனும் என்பதன் உம்மை முன் வந்த சாத்தனைத் தழுவுதலின் இறந்தது தழுவியது.