பக்கம் எண் :

எச்ச உம்மை-காலமயக்கம் சூ. 41285

வ-று : ‘கூழுண்டான் சோறும் உண்ணா நின்றான்’ என வரும். ‘சோறுண்பான் கூழுண்டான்’ எனவரும்; பரிமாறிக் கொள்க.

சேனா

இ-ள் : உம்மையெச்சத்தின் முன் எஞ்சு பொருட் கிளவி உம்மையில் சொல்லாய் வருங்கால், நிகழ் காலத்தோடு எதிர்காலமும் இறந்த காலத்தோடு எதிர்காலமும் மயங்குதல் வரையார், எ-று.

‘முறை நிலையான’ என்றதனான், கூறிய முறையானல்லது எதிர்காலம் முன்னிற்ப ஏனைக்காலம் பின் வந்து மயங்குதல் இல்லை யென்பதாம்.

உ-ம் : ‘கூழுண்ணா நின்றதனான் சோறும் உண்பன் எனவும், கூழுண்டான் சோறு உண்பன் எனவும் அவை கூறிய முறையான் மயங்கியவாறு கண்டுகொள்க.

இவற்றோடு இது மயங்குதல் வரையார் எனவே, இறந்த காலத்தோடு நிகழ்காலமும், நிகழ்காலத்தோடு இறந்த காலமும் வந்து மயங்குதல் வரையப்படும் என்ற வாறாயிற்று.

‘தன்மேற் செஞ்சொல் வரூஉங் காலை’ என்றதனான், உம்மையடுத்த சொல் வருங்கால் வேறுபாடின்றி இரண்டு சொல்லும் ஒரு காலத்தான் வரும் என்பதாம்.

தன்வினை, காலம் வேறுபடுதலும் படாமையும் உடைமையான், இன்னுழி இன்னவாற்றானல்லது காலம் வேறு படாதென வரையறுத்தவாறு.

தெய்

மேற்சொல்லப்பட்ட உம்மைப்பொருட்கண் வரும் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் : உம்மைப் பொருட்கண் உம்மைகொடாது செஞ்சொல்லாகிவரின் அவற்றுள் நிகழ் காலத்தொடு எதிர்காலமும் இறந்தகாலத்தொடு எதிர்காலமும் மயங்குதல் நீக்கார்; முறை பிறழாமல் நிற்கும்வழி, எ-று.