தெய் இதுவும் அது. இ-ள் : மேற் சொல்லப்பட்ட மூன்று சொல்லும் வந்த சொல்லையுடைய வல்லவாயினும், தத்தங் குறிப்பினான் எஞ்சிய பொருண்மையை யுணர்த்தும், எ-று. உதாரணம் சிறப்புச் சூத்திரத்துட் காட்டுதும். நச் இது குறிப்பெச்சமும் இசையெச்சமும் முடியுமாறு கூறுகின்றது. இ-ள் : எச்சம்-சொல்லெச்சம் ஒழிந்த இருவகையெச்சங்கள், தத்தம் குறிப்பின செப்பும்-தம்மைக் கூறுவோர் தம்முடைய குறிப்புக்களாலே தம்முடைய எஞ்சு பொருளைத் தாமே கூறிநிற்கும், எ-று. உ-ம் : ‘கற்கறிக்க நன்கு கட்டான்’ என்றால் தீங்கு அட்டான் என்னும் குறிப்பு, தோன்றிய எஞ்சு பொருளினைத் தானே கூறி நின்றது. வயிறு மொடு மொடுத்தது என்றால் இசையிற் குறிப்பாகிய ‘உண்ண வேண்டா’ என்னும் எஞ்சு பொருளினைத் தானே கூறிநின்றது. இவ்விசையிற் குறிப்பு வயிற்றின் கண்ணும்கொள்க. இனி, பிறசொல் வாராது, தம்மைத் தாமே முடிக்கும் என்று, 1விண்ணென விணைத்தது, ஒல்லென வொலித்தது என்பன காட்டினாரால் உரையாசிரியர் எனின், அவை தம்மைத் தாமே முடியாமல், ‘அது விண்ணென வீங்கிற்று, ஒல்லென வோடிற்று எனப்பிற சொல் வந்து முடித்தலும் அவற்றிற்கு ஏற்கும் ஆகலானும், அவை ‘என’ என்னும் இடைச்சொல் ஆகலானும், அவற்றைக் கொண்டால் ‘காரெனக்கறுத்தது’ என்னும் பண்பும் கோடல் வேண்டும் ஆகலானும் அது போலி உரையாம்.
1. விண்ணென விசைத்தது என்பது இளம்பூரணர் காட்டியது. |