சுப். உரையாசிரியர் ‘பொதுங்கர் நாடு’ என்றும் சேனாவரையர் ‘பொங்கர் நாடு’ என்றும் கூறுகின்றனர். ஒரு கால் ‘பொதுங்கர்’ என்பதில் ‘து’ என்பது விடுபட்டுப் ‘பொங்கர்’ என்று எழுதப்பட்டிருக்கலாம். சிவ. சூத்திரப் பொருள் : செந்தமிழ் மொழி சேர்ந்துள்ள பன்னிரு நிலத்தினும் வழங்கும் சொற்கள், அந்த அந்த நிலத்தில் குறிக்கும் பொருள்கள் அங்கங்குள்ளார். யாவர்க்கும் எளிதில் விளங்கக் கூடியனவாய இயற்சொற்களே; அவை அடுத்த நிலத்தார்க்குப் பொருள் விளங்க அரியவாயிருப்பின் அச்சொற்கள் திரிசொற்களாகும். ‘செந்தமிழ் நிலம் சேர்பன்னிரு நிலம்’ என்பதற்குச் செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பிற பன்னிரு நிலங்கள் என்பது பொருளன்று. செந்தமிழ் மொழி வழங்கும் பன்னிரு நிலம் என்பதே பொருள். ‘செந்தமிழ் சேர் ஏதமில் - பன்னிருநாடு’ என்பதற்கும் இதுவே பொருளாகக் கொள்க. தென்பாண்டி என்றது தமிழகத் தெற்கின் கண்ணதாகிய பாண்டியநாட்டு நிலம் எனப் பொருள் கொள்க. ஒரு நிலத்து வழங்கும் ஒரு சொல் தனக்குரிய பொருளைப் பிறிதொருநிலத்து எளிதில் புலப்படுத்தாதாயின் அது தன் நிலத்துக்கு இயற் சொல்லாகவும் பிற நிலத்துக்குத் திசைச் சொல்லாகவும் ஆம். சிரட்டை என்னும் சொல் பாண்டிய நாட்டில் தேங்காய் ஓட்டைக்குறிக்கும் இயற்சொல். அது தொண்டை நாட்டில் வழங்குவதன்று. அச்சொல் செய்யுளில்-தொண்டை நாட்டுப் புலவன் ஆளின் திசைச் சொல்லாகும். செய்யுளில் வரும் திசைச் சொற்கள் சிலர்க்கு இயற்சொல்லாகவும் சிலர்க்கு அரிதான திசைச்சொல்லாகவும் காணப்படற்கு இதுவே காரணம் என்க. சில திரி சொற்களும் திசைச் சொற்கள் போலவே இயற்சொல் திரிசொல் என அமையும். |