தகுதியாவது, ‘செத்தான்’ எனப் பெரும்பான்மை வழங்கப்பட்டன, தகுதி நோக்கித் ‘துஞ்சினான்’ எனச்சிறுபான்மை வழங்கப்பட்டு நிற்கும்; அவையல் கிளவியாவது இழிந்தோர் கூறும் இழிசொற்களை நன்மக்களிடை மறைத்துக் கூறப்படும். இஃது இரண்டற்கும் வேற்றுமை. இங்ஙனம் மறைத்துக் கூறாக்கால் வழுவாதல் கருதி வழுவமைத்தார். 1இது ‘பொருளிடையிடுதல்’ (மரபியல் 110) என்னும் தந்திரவுத்தி. வெள் இது மரபு வழுக்காக்கின்றது. இ-ள் : அவைக்கண் உரைக்கப்படாத சொல்லை அவ்வாய்பாடு மறைத்துப் பிறவாய்பாட்டாற் கூறுக, எ-று. அவைக்கண் வழங்கப்படும் சொல்லை ‘அவை’ எனக்குறித்தார். உ-ம் : ‘ஆன்முன் வரூஉம் ஈகாரபகரம் எனவும், ‘புலி நின்றிறந்த நீரல் ஈரத்து’ எனவும் இடக்கர் வாய்பாடு மறைத்துப் பிறவாய்பாட்டாற் கூறியவாறு. இங்ஙனம் அவைக்கண் வழங்கப்படாத இடக்கர்ச் சொல்லை மறைத்துக் கூறுதலை ‘இடக்கர் அடக்கல்’ எனக் கூறுவர் பவணந்திமுனிவர் (நன். 206).
1. பொருள் இடையிடுதல் : இனமான பொருள்களை ஒரேயிடத்திற்சேரக் கூறாமல் வெவ்வேறிடத்தில் இடையிட்டுக் கூறுதல், தகுதிவழக்கும் அவையல் கிளவியை மறைத்தலும் ஒன்றைப் பிறிதொன்றாற் கூறுதல் என்பதனால் ஓரினம். தகுதி வழக்குப் பற்றிக் கிளவியாக்கத்தில் ‘தகுதியும் வழக்கும்’ (17) என்னும் சூத்திரத்திற் கூறிய ஆசிரியர் அதன் இனமான அவையல் கிளவியை மறைத்தல் பற்றி ஆண்டே சேரக்கூறாமல் இடையிட்டு எச்சவியலில் கூறினார். இது பொருள் இடையிடுதல் என்னும் உத்தி. |