இரப்புச் சொற்கள் சூ. 48 | 317 |
இளம் இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் கிளவியாக்கத்துக் கூறப்படாது ஒழிந்து நின்றதோர் மரபிலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. உரை : இக்கூறப்பட்ட மூன்றும் இரப்போர் சொல்லுதற்குரிய, எ-று. ஒருவரை யொருவர் இரக்குங்கால் இம்மூன்றனுள் ஒன்று சொல்லி யிரப்பது என்றவாறு. சேனா இ-ள் : ஈ, தா, கொடு எனச் சொல்லப்படும் மூன்றும் ஒருவன் ஒன்றை, யிரத்தற்கண் வருஞ் சொல்லாம், எ-று. அவை 1பிறபொருள்மேல் வருதலும் உடைமையான் ‘இரவின் கிளவியாகிடனுடைய’ என்றார். வழங்கல், உதவல், வீசல் முதலாயின பிறவும் உளவாக இவற்றையே விதந்து ஓதியது என்னை யெனின், 2அவை, கொடைப் பொருளவாய் வருவதல்லது 3இவை போல இரத்தற்குறிப்பு வெளிப்படுக்கும் இரவின் கிளவியாய்ப் பயின்று வாராமையானும், இன்னார்க்கு இன்னசொல் உரித்தென்று வரையறுத்தலும் வழுவதைத்தலுமாகிய ஆராய்ச்சி 4ஆண்டின்மையானும் இவற்றையே விதந்து ஓதினார் என்பது. அஃதேல், ‘ஈயென் கிளவி’ (எச்ச. 49) என்னும் சூத்திர முதலாய நான்கும் அமையும், இச்சூத்திரம் வேண்டாவெனின், இவை இரவின் கிளவியாதலும் மூன்று என்னும் வரையறையும் அவற்றாற் பெறப்படாமையின் வேண்டும் என்பது.
1. பிற பொருள்மேல் வருதல் : ஈ-பறக்கும் ஈ; தா-தாவுதல், குற்றம்; கொடு-வளைவு. 2. அவை-வழங்கல் முதலியன; 3. இவை-ஈ, தா, கொடு என்பன. 4. ஆண்டு - வழங்கல் முதலியனவற்றில் |