இளம் இச்சூத்திரம் என்னுதலிற் றோவெனின், மேற்கூறப்பட்ட மூன்றனுள், ஈ என்னும் சொல் இரக்கப்படுவோரை இழிந்தோர் கூறி யிரக்குஞ்சொல் என்றவாறு. வ-று : 1உடுக்கை யீ, மருந்து ஈ எனவரும். சேனா (இது முதல் மூன்று சூத்திரங்களுக்கும் சேர்த்து உரை யெழுதினார் ஆதலின் ‘கொடுவென் கிளவி’ என்னும் சூத்திரத்தில் உரை காண்க.) தெய் கொடு வென் கிளவி என்னும் சூத்திரத்திற்காண்க) நச் இது முதலதன் மரபு கூறுகின்றது. இ-ள் : அவற்றுள் ஈ என் கிளவி-முற்கூறிய மூன்றனுள் ‘ஈ’ என்னும் சொல், இழிந்தோன் கூற்று - இரக்கப் படுவானின் இழிந்த இரவலன் அவனை யிரக்குங்கால் கூறும் கூற்றாம், எ-று. உ-ம் : பெருமா எனக்கொரு பிடிசோறு ஈ எனவும் ‘ஈயென யிரத்தலோ அரிதே நீயது’ (புறம். 154) எவும் இவ்விரண்டும் 1தன்மையும் முன்னிலையும் பற்றி வந்தன. 2‘சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே’ (புறம். 235) என்றது உளப்பாட்டுத் தன்மையும் படர்க்கையும் பற்றி வந்தது.
1. உடுக்கை - உடை, ஆடை. 1. எனக்கு ஈ என்றலின் தன்மை பற்றி வந்தது. நீ ஈஎன இரத்தல் என்றலின் முன்னிலை பற்றி வந்தது. 2. எமக்கு என்றது தன்னையும் பிறரையும் குறித்தது. |