உ-ம் : சோறுஈ, ஆடைதா, சாந்து கொடு என மூன்று சொல்லும் முறையானே மூவர்க்கும் உரியவாய் வந்தவாறு கண்டுகொள்க. தெய் (48, 49, 50, 51 சூத்திரங்களின் உரை) *இதுவும் ஒரு சார் குறிப்புச் சொல் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : ஈ தா கொடு என்னும் சொற்கள் ஒருபறவையின் பெயரும் தொழிற் பொருண்மையும் கொடுமையும் ஆதலன்றி இரப்போன் கூற்றாதலும் உரிய; அவற்றுள் ஈ என்பது இழிந்தோன் கூற்று என்பதூஉம், தா என்பது ஒப்போன் கூற்று என்பதூஉம், கொடு என்பது உயர்ந்தோன் கூற்று என்பதூஉம் உணர்த்தும், எ-று. இச்சொற்கள் தம்மானே இழிந்தோன், ஒப்போன், மிக்கான் என்னும் பொருண்மை எஞ்சி நிற்றலிற் குறிப்பெச்சம் ஆயிற்று. நச் இது மூன்றாவதன் மரபு கூறுகின்றது. இ-ள் : கொடு என்கிளவி-கொடு என்னும் படர்க்கையாகிய முதல்நிலைச்சொல், உயர்ந்தோன் கூற்று-இரக்கப்படுவோனின் உயர்ந்த இரவலன் அவனை இரக்குங்கால் கூறும் கூற்றாம், எ-று. உ-ம் : ‘இவற்கு ஊண்கொடு’ எனவரும். வெள் (49, 50, 51 சூத்திரங்களின் உரை) இ-ள் : முற்கூறிய மூன்றனுள் ஈ என்னும் சொல் இரக்கப்படுவோனின் இழிந்த இரவலன் கூற்றாகும்; தா என்னுஞ் சொல் அவனோடு ஒப்போன் கூற்றாகும்; கொடு என்னுஞ் சொல் அவனின் உயர்ந்தவன் கூற்றாம், எ-று.
* இவ்வுரை பிறர் உரையானும் வேறுபட்டது. |