கொடு என்பது; ஆண்டுப் படர்க்கையிடத்துக்கு உரித்தாகக் கூறினான் மன; ஆயினும் அது தன்மையிடத்தே யியல்பு காட்டப் படர்க்கையிடத்திற்கு உரித்தாகாது, அவன் இரக்கப்படுபொருளும் அக்கொடு என்ற சொல்லும் என்பது, எ-று. தன்னைப் பிறன்போற் கூறும் குறிப்பில் ‘தனக்குக் கொடு’ என்றது வாய்பாடன்றேனும் அது தனக்கே சொல்லியவாறு. உம்மையாற் பிறகிளவியும் படர்க்கையாயினும் தன்னைப் பிறன்போற் கூறும் குறிப்பிற் றன்னிடத்து இயலும் என்றவாறு, ஆண்டு இரவின்கிளவி யல்வழி யென்பது. 1‘அங்ஙனஞ் சொல்லுவானோ பெருஞ்சாத்தன் தந்தை, 2சொல்லப்படுவாளோ பெருஞ்சாத்தன் தாய்’ என்னும் தன்னைப் பிறன் போல்வானும்; அது தன்னிடத்து இயலும் என்றவாறு. சேனா இ-ள் : கொடு என்னும் சொல் முதனிலை வகையாற் படர்க்கை யாயினும் தன்னைப் பிறனொருவன் போலக் கூறும் கருத்துவகையால் தன்னிடத்துச் சொல்லும், எ-று. உ-ம் : 3மேற் காட்டப்பட்டது. தன்மைக்கும் முன்னிலைக்கும் உரிய தா என்பதனா னாக பொதுவாகிய ஈ என்பதனானாகவன்றே சொல்லற்பாலது? உயர்ந்தான் அங்ஙனம் தான் ஏற்பானாகச் சொல்லாது கொடு எனப்படர்க்கை வாய்பாட்டாற் சொல்லும்; ஆண்டுத் தன்னையே பிறன்போலக் குறித்தானாகலிற் றன்னிடத்தேயாம் என இட வழுவமைத்தவாறு.
1. இது பெருஞ்சாத்தன் தந்தையின் கூற்று. 2. இது பெருஞ்சாத்தன் தாயின் கூற்று. 3. சாந்து கொடு என்பது மேற்காட்டப்பட்டது. (சூ. 442.) இங்கு, ‘இவற்குச் சாந்து கொடு’ என்றதாகக் கொள்க. |