பக்கம் எண் :

338தொல்காப்பியம்-உரைவளம்

பொருள் பெயர்ந்து ஒரு பெயர்த் தன்மையாய் ‘செழுந் தாமரையன்ன வாட்கண்’ (சீவக.8) என்பதூஉம் அது.

தென்னவன், வடமன், குடக்கோ, தென்பாண்டி என இவை திசைநிலைக்கிளவி.

முதுமொழி பொருள்உடையனவும் பொருள் இல்லனவும் என இருவகைப்படும். ‘யாட்டுளான் இன்னுரை தாரான்’ என்றது, “இடையன் எழுத்தொடு புணர்ந்து பொருள் அறிவுறுக்கும் மொழியைக் கூறுதலன்றி, எழுத்தொடு புணர்ந்து பொருள் அறிவுறுக்கும் மொழியைக் கூறான்” என்னும் பொருள் தந்து நின்றது. ‘யாற்றுட் செத்த எருமை யீர்த்தல் ஊர்க்குயவர்க்குக் கடன்’ என்பது’ “குயவன் சுள்ளையின் எழுந்த புகையான் ஆயமேகம் தந்த நீரான் எருமைசாதலின், அதனை இழுத்தல் குயவர்க்குக் கடனாயிற்று” என ஒருகாரணம் உள்ளது போலக் கூறுகின்றது, உண்மைப் பொருளன்றி, ஒருவன் இயைபின்றிக் கூறிய சொற்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படுதலின் பொருள் உணர்த்தாதாயிற்று.

’இல்வாழ்வான் என்பான்’, (குறள்41), ’திணைத் துணையும் தேறான் பிறனில் புகழ்’ (குறள். 144), ’நட்பரண் ஆறும் உடையான்’ (குறள். 381), ’வறியவன் இளமைபோல்’ (கலி.10) என்றாற் போல்வன எல்லாம் ஒருமைப் பொருள் கூறிற்றேனும் பன்மைப் பொருளை உணர்த்தலின் மெய்ந்நிலை மயக்கம் ஆயிற்று. மெய்-பொருள்.

மந்திரச்சொல் மந்திர நூல்களிற் கேட்டுணர்க.

நம்பி நங்கையென அஃறிணையைக் கூறுவனவும் ’எழுதுவரிக் கோலத்தார்’ (நன். 268. மயிலை. ஒரை மேற்) என்னும் பிரேளிகைச் செய்யுளில் திணை வழுவும், ‘ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்’ (கிளவி. 27)என்னும் சூத்திரத்துள் அடங்குமாறும், புலியான், பூசையான் என்பன திசைச்சொற்கண் அடங்குமாறும் உணர்க. வெண்கொற்றப் படைத்தலைவனும் சிறப்பினாகிய பெயர்க்கண் அடங்கும்.